இந்தியாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர்தான் பிரகாஷ் ராஜ், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் செய்லபட்டு வருகிறார். மக்களுக்கு ஒருபுறம் நன்மை செய்து வந்தாலும், அரசியல் ரீதியான கருத்துகளை முன்வைப்பார்.
குறிப்பாக பாஜக, பிரதமர் மோடி உள்ளிட்டோரின் மக்கள் விரோத செயல்பாட்டுக்கு உடனடியாக எதிர்வினையாற்றி விமர்சனத்தை முன்வைப்பார். பாஜக மற்றும் ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை பதிவு செய்யும், இந்துத்துவ சிந்தனைக்கு எதிராகவும் இருந்து வருகிறார். மேலும் மோடியை ஹிட்லரோடு ஒப்பிட்டு அண்மையில் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சிவமொக்கா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் காஸ்தே MV கல்லூரியில் 'தியேட்டர் வசனம், சினிமா, சமூகம்' என்ற கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இவரது வருகைக்கு முன்பே மாணவர்களில் ஒரு தரப்பினர், இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கல்லூரி உள்ளேயே போராட்டமும் நடத்தினர். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. எனவே நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்ட போலீசார், பிரச்னையில் ஈடுபட்ட மாணவர்களை உள்ளே விட மறுத்தனர். இதனால் மாணவர்கள் கல்லூரி வாசலில் போராட்டம் நடத்தினர். இதனிடையே நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்புரை ஆற்றிவிட்டு கல்லூரியில் இருந்து வெளியேறினார்.
பிரகாஷ் ராஜ் சென்ற பிறகு கல்லூரி உள்ளே வந்த அந்த மாணவர்கள், அவர் நின்ற, நடந்த இடத்தை மாட்டு கோமியத்தை தெளித்தனர். மாணவர்களின் இந்த செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் கண்டங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்து வருகிறது.
கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற நடிகர் பிரகாஷ் ராஜ் நின்ற இடத்தை சில மாணவர்கள் கோமியத்தை தெளித்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் கண்டனத்தையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.