தமிழ சினிமாவின் முன்னணி படத் தொகுப்பாளராக பணியாற்றியவர் ஆர்.விட்டர். இவர் படத் தொகுப்பின் பிதாமகன் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏன் என்றால் சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட நட்சத்திரங்களின் படங்களுக்கு படத் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
AVM தயாரிப்பில் வெளியான 40 படங்களுக்கு இவர்தான் படத் தொகுப்பாளர். அதேபோல் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் 71 படங்களும் , சிவாஜி கணேசனுக்கு 18 படங்களுக்கும், கமல்ஹாசனுக்கு10 படங்களுக்கும், ரஜினியின் 33 படங்களுக்கும் என மொத்தமாக 170 படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
படத்தொகுப்போடு நின்று விடாமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என்ற அவதாரமும் எடுத்துள்ளார். இவரது இயக்கத்தில் 'வீட்டுக்கு வந்த மருமகள்', 'உன்னைத்தான் தம்பி', 'எங்களுக்கும் காதல் வரும்', 'தொட்டதெல்லாம் பொன்னாகும்', 'முத்தான முத்தல்லவோ' உள்ளிட்ட படங்களும் வெளிவந்துள்ளது. அதோடு 'முத்தான முத்தல்லவோ','பெண்ணைச் சொல்லி குற்றமில்லை', 'முடிசூடா மன்னன்' ஆகிய மூன்று படங்களைத் தயாரித்துள்ளார்.
வயது மூப்பின் காரணமாகச் சென்னையில் ஓய்வு பெற்று வந்த ஆர்.விட்டல் நேற்று மாரடைப்பால் காலமானார். இவரது இறுதி நிகழ்ச்சி இன்று கோடம்பாக்கத்தில் நடைபெறுகிறது. உயிரிழந்த படத்தொகுப்பாளர் ஆர்.விட்டலுக்கு ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.