பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர்தான் நடிகர் ஷாருக்கான். இவரது நடிப்பில் எந்த படம் வந்தாலும் அது வசூல் ரீதியாக பெரிய வசூல் வேட்டை செய்து விடும். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான படம்தான் 'பதான்'. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1,050 கோடி வரை வசூல் சாதனை செய்தது.
இதைத்தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் 'ஜவான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது இந்த சூழலில் இவரை பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகை மஹ்னூர் பலோச் விமர்சித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் நடிகை மஹ்னூர் பலோச் அண்மையில் அளித்த பேட்டியில், “என்னை பொறுத்தவரையில் ஷாருக்கானுக்கு நடிக்க தெரியாது; அவர் அழகாகவும் இல்லை. ஆனால் அவர் ஒரு மார்க்கெட்டர். தன்னை எப்படி சந்தைப்படுத்த வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். ஒருவேளை நான் கூறுவது அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இருந்தாலும் பரவாயில்லை.
அவர் ஒரு நல்ல ஆளுமை கொண்ட நபர். நன்றாக சந்தைப்படுத்துகிறார். இன்னமும் பாலிவுட்டில் வெற்றி பெறாத பல நடிகர்கள் உள்ளனர். தன்னையும் தனது படத்தையும் எப்படி மார்க்கெட் செய்து உலகளவில் வசூல் சாதனைகளைப் படைக்க முடியும் என்பதை நன்கு மட்டும் அறிந்து வைத்திருக்கிறார்." என்றார். பாகிஸ்தானை சேர்ந்த நடிகையின் இந்த பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு ஷாருக்கின் ரசிகர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தானை சேர்ந்த மஹ்னூர் பலோச் பிரபல நடிகையாக உள்ளார். தற்போது 53 வயதாகும் இவர், பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார். தொலைக்காட்சி தொடர் நடிகையான இவர், 2013-ல் வெளியான மை'ன் ஹூன் ஷாஹித் அப்ரிடி' என்ற பாகிஸ்தான் படத்தில் நடித்துள்ளார். மேலும் Torn என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.