இந்திய அணியின் சிறந்த கேப்டனாக இருந்தது யார் என்று கேட்டால் உடனடியாக நினைவுக்கு வருபவர் மகேந்திர சிங் தோனிதான். இவர் கேப்டனாக பதவியேற்ற பிறகுதான், இந்திய அணியை மிகப்பெரிய உச்சத்திற்குக் கொண்டு சேர்த்தார். தோனியின் தலைமையில் இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என மூன்று விதமான போட்டிகளிலும் கோப்பை வென்றது.
பின்னர் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் சென்னையின் எஃப்.சி கால்பந்து அணியின் உரிமையாளராகவும் இவர் உள்ளார். இந்த நிலையில் இவரது 'தோனி எண்டர்டென்மெண்ட்' தயாரிப்பு நிறுவனம் முதல் முறையாக தமிழ் படத்தைத்தான் தயாரிக்கிறது.
அதன்படி Lets Get Married (LGM) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். காமெடி ரோமன்ஸ் படமாக உருவாகும் இந்த படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த சூழலில் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வெளியான 1 மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்துள்ளது.
படத்தின் ட்ரைலர் எப்படி ? :
கதாநாயகியும், கதாநாயகனும் ஒருவரை ஒருவர் 2 வருடமாக காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் காதலுக்கு இரு வீட்டார் சம்மத்துடன் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. ஆனால் கதாநாயகனோ தாயை விட்டு வரமாட்டேன் என்கிறார். கதாநாயகிக்கோ பழகி பார்க்காமல் ஒரே குடும்பமாக எப்படி இருப்பது என்று யோசித்து அதற்காக ஐடியா ஒன்றை கொடுக்கிறார்.
அந்த ஐடியாவின்படி வருங்கால மாமியாருடன் மருமகள் பழகி பார்க்க வேண்டும் என்று பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் குடும்பத்துடன் டூர் செல்கின்றனர். அங்கே வைத்து மாமியார், மருமகள் இருவரும் காட்டுக்குள் மாட்டிக்கொள்கின்றனர். அவர்கள் இருவரும் இறுதியில் எப்படி தப்பிக்கிறார்கள்? ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு கதாநாயகனுடன் திருமணத்துக்கு ஒப்புக்கொள்வாரா என்பதே கதையாக இருப்பதாக தெரிகிறது.
இவனாவுக்கு இது மேலும் ஒரு நல்ல வரவேற்பை கொடுக்குமா என்பதை பட வெளியீட்டுக்கு பின்னர் தான் தெரியும். தோனி எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படமான LGM படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர். எனினும் இது ரசிகர்களை கவருமா எவ்வாறு கவரும் என்பது படம் வெளியான பின்னரே தெரியவரும்.