இந்திய இதிகாசம் என்று சொல்லப்படும் 'இராமாயணம்' கதையை தழுவி எடுத்த படம் தான் 'ஆதிபுருஷ்'. பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ராமராக பிரபாஸும், சீதாவாக கிரீத்தி சனோனும், இராவணனாக சைப் அலிகானும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள், நெட்டிசன்கள் மத்தியில் பெரும் நகைப்பை ஏற்படுத்தியதோடு, இதனை பெரிய கன்டென்டாகவும் மாற்றி கிண்டல் செய்து வந்தனர்.
தொடர்ந்து இந்த படத்தின் ட்ரைலரை பார்த்து, டெம்பிள் ரன், கார்ட்டூன் படம், அனிமேஷன் படம் என்று செம்மயாக கலாய்த்து தள்ளினர். டீசரை தொடர்ந்து ட்ரைலர் வெளியானபோதும் அதே போல் நெட்டிசன்கள் கிண்டலடித்து மீம் செய்து வந்தனர். மேலும் இந்த படத்தின் புது ட்ரைலர் என்று கூறி, வேறொரு ட்ரைலரை வெளியிட்டபோதும், அதனையும் கலாய்த்தனர்.
மேலும் இந்த படம் வெளியீட்டின்போது அனைத்து திரையரங்கிலும் அனுமனுக்கு ஒரு தனி இருக்கை விடப்படும் என்று படக்குழு அறிவித்தனர். இதனையும் நெட்டிசங்கள் மீம் உருவாக்கி நக்கல் செய்து வந்தனர். இந்த நிலையில் இந்தி படமான இது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகள் இன்று (16-ம் தேதி) நாடு முழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ளது.
இருப்பினும் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் இதற்கான முன்பதிவு டிக்கெட் கூட இரட்டை இலக்கு எண்ணிலே உள்ளதாக தகவல்கள் வெளியானது. இருப்பினும் இன்று இந்த படம் வெளியாகி மோசமான ரிவியூக்களை பெற்று வரும் நிலையில், ரிவியூ கொடுத்த ரசிகரை கும்பல் ஒன்று தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐதராபாத்தில் ‘ஆதிபுருஷ்’ படம் பார்த்துவிட்டு வெளியே வந்த இளைஞர் ஒருவர், அங்கு ரிவியூ கேட்டுக்கொண்டிருந்த செய்தியாளர்களிடம் மைக்கில் படத்தின் கிராபிக்ஸ் பிளேஸ்டேஷன் வீடியோ கேம் போல உள்ளதாகவும், அனுமன், பின்னணி இசை தவிர்த்து படத்தில் ஒன்றுமே இல்லை என்றும் கூறினார். மேலும் ராமராக பிரபாஸ் பொருந்தவே இல்லை என்றும், பாகுபலி படத்தில் எப்படி இருந்தார்; இந்த படத்தில் அவரை இயக்குநர் ஓம் ராவத் சரியாகக் காட்டவில்லை என்றும் கூறினார்.
இதனை கேட்ட அங்கிருந்த கும்பல் ஒன்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. மேலும் அவரை சரமாரியாக தாக்கியும் உள்ளது. அவர் தடுக்க முயன்றும் அந்த கும்பல் தாக்கியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பல்வேறு கண்டனங்களை பெற்று வருகிறது.