பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் படத்தில் துணை இயக்குநராக பணியாற்றிய இவர், அதே படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரைக்கு அறிமுகமானார். அதன்பிறகு சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர், 1982-ல் வெளியான ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அதன்பிறகு பிள்ளை நிலா, மூடு மந்திரம், ஊர்க்காவலன் என 22 தமிழ் படங்களை இயக்கியுள்ளார். இவர் சிவாஜி, ரஜினி, பிரபு, சத்யராஜ், நிழல்கள் ரவி உள்ளிட்ட பல முக்கிய திரை பிரபலங்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். மேலும் 1989-ம் ஆண்டு கலைஞர் எழுத்தில் உருவான 'தென்றல் சுடும்' படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நிழல்கள் ரவி, ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தொடர்ந்து பல படங்களில் முக்கிய வேடங்கள், காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், சுமார் 25-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தொடர்ந்து காமெடிகளில் நடித்து வரும் இவர், காமெடி நடிகராகவே அறியப்படுகிறார். முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ள இவர், தமிழ் மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட இவர், 2014-ல் வெளியான சதுரங்க வேட்டை திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதற்காக சிறந்த தயாரிப்பாளர் விருதை பெற்ற இவர், தொடர்ந்து பாம்பு சட்டை என்ற படத்தையும் தயாரித்தார். அதன்பிறகு விரைவில் வெளியாக இருக்கும் சதுரங்க வேட்டை 2 என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கல்லீரல் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த மனோபாலா இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.