தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் விஷால். இவர் தற்போது 'மார்க் ஆண்டனி' என்ற படத்தின் நடித்து வருகிறார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் விஷாலுக்கு ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, புஷ்பா பட வில்லன் சுனில் உள்ளிட்ட பல முக்கிய திரை நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.
ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் முன்னதாக விஷாலின் 'எனிமி' படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பித்தக்கது. மார்க் ஆண்டனி படத்தின் முதல் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த சூழலில் இந்த படத்தின் டீசர், ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இதன் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது மார்க் ஆண்டனி டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
ஜி.வி. பிரகாஷின் திரிஷா இல்லனா நயன்தாரா, சிம்புவின் அன்பானவன் அசாராதவன் அடங்காதவன் ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், தனது 4-வது படமாக 'மார்க் ஆண்டனி' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரில் 80'ஸ் காலத்தில் இருப்பது போல் இருக்கும். எனவே இந்த படம் அந்த காலத்தை சார்ந்து இருப்பதாக எண்ண முடிந்தது.
ஆனால் இதன் டீஸரில் நிகழ் காலம், கடந்த காலம், எதிர்காலம் ஆகியவற்றை கொண்டு உள்ளது. ஆம், இது ஒரு டைம் ட்ராவல் படமாக அமைந்துள்ளது. இதில் இருக்கும் ஒவ்வொரு வசனமும் டைம் ட்ராவல் பற்றியது என்று ஆரம்பத்திலே நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. டீசரின் நடுவே போனில் டைம் ட்ராவலா என்று SJ சூர்யா வசனம் இதனை உறுதி செய்துள்ளது.
போன் மூலம் டைம் ட்ராவல் செய்யும் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா தங்கள் முன்னாள் ஜென்மத்துக்கே போனதுபோல் காட்சிகள் அமைந்துள்ளது.
இதில் வில்லனாக SJ சூர்யா இருப்பதுபோல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஒரு கட்டத்தில் கடந்த கால விஷால் நிகழ் கால விஷாலை நோக்கி துப்பாக்கியை காட்டும் காட்சியும் ரசிகர்களுக்கு மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது. டீசரில் இடம்பெற்றிருக்கும் இசை Vintage இசையாகவே அமைந்திருக்கிறது. பொதுவாக டைம் ட்ராவல் பற்றிய படத்தை நாம் கண்டிருப்போம்.
குறிப்பாக இன்று நேற்று நாளை, டிக்கிலோனா உள்ளிட்ட தமிழ் படங்களை நாம் கண்டிருப்போம். ஆனால் அவை அனைத்தும் காமெடி படங்களாக அமைந்திருந்த நிலையில், மார்க் ஆண்டனி முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக அமைந்துள்ளது என்று டீசர் வாயிலாகவே நம்மால் அறிய முடிகிறது. விஷால் சினிமா வாழ்வில் இந்த படம் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த படம் வெளியாகி அதனை பூர்த்தி செய்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.