தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது படங்கள் சில தோல்வியை தழுவினாலும் ரசிகர்கள் அதனை வசூல் ரீதியாக வெற்றியடைய செய்து விடுவர். நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமல்லாது பைக் ரேஸிலும் கில்லாடி. இதனாலே அவர் அடிக்கடி பைக்கில் ஊர் ஊராக பயணம் செய்வார். இப்படி பல்வேறு மாநிலங்கள், நாடுகளுக்கு பயணம் செய்து புதுவித அனுபவத்தை தேடிக்கொள்வார்.
இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 'துணிவு' படம் வெளியானது. வழக்கம்போல் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் நடித்து கொண்டிருக்கும்போதே அஜித், வெளிநாட்டுக்கு தனது பைக்கில் பயணம் செய்தார். அப்போது வட மாநிலங்களுக்கு பைக்கில் பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் அங்கு இளைஞர் ஒருவருக்கு உதவியுள்ளார். இது குறித்து அந்த இளைஞர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றையும் வெளியிட்டு பாராட்டை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து துணிவு படம் வெளியான பிறகும் தனது வெளிநாட்டு பயணத்தை விடாமல் தொடர்ந்தார். இதனிடையே இவர் தனது அடுத்த படமான AK 62 படத்தின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாக கூறப்பட்டு வரும் நிலையில், இன்னும் இயக்குநர் குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
AK 62 படப்பேச்சுக்கு பிறகு அஜித் தனது ஓய்வுக்காக மீண்டும் வெளிநாடு சென்றார். அங்கே சென்ற அவர் ஸ்காட்லாந்து சென்றுள்ள அவர், லாக்கர்பி 'பான் ஆம் விமானம் 103' குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஒரு சுற்று பயண ஆர்வலராக இருக்கும் இவர் அடிக்கடி வெளிநாடு சென்று வருகிறார். தற்போதும் கூட அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாமல் உள்ளது.
இந்த சூழலில் பெண் ஒருவருக்கு அஜித் உதவியது தொடர்பான புகைப்படம் வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் வெளியிட்டுள்ள பதிவில், "என் மனைவி, கிளாஸ்கோவில் இருந்து எங்கள் 10 மாத குழந்தையுடன் சென்னை வந்தார். தனியாக அவர் பயணம் செய்தார். அப்போது லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் நடிகர் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. எனது மனைவி கேபின் சூட்கேஸ் மற்றும் குழந்தையை வைத்துக்கொண்டு ஒரு பையையும் சுமந்து கொண்டிருந்தார்.
அவரை கண்டதும் எனது மனைவி அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டார். அதோடு மட்டும் நிற்காமல் என் மனைவி தனியாக வந்திருப்பதைப் புரிந்துகொண்டு, அவள் பையையும் எடுத்துச் சென்று உதவினார். என் மனைவி அதற்கு பரவாயில்லை என்று கூறினார்.
அதற்கு அஜித், “பரவாயில்லை. எனக்கும் 2 குழந்தைகள் இருக்காங்க. அதனால் உங்கள் சூழலை உணரமுடியும்” என்று சொல்லிவிட்டு, என் மனைவியின் இருக்கைக்கு மேலே அந்த சூட்கேஸ் பைகள் வைக்கப்பட்டதை உறுதி செய்து அதன் பின்னர்தான் சென்றார்.
அஜித்துடன் வந்த ஒரு நபர் "தலைவா நீங்க எதற்கு, நான் எடுத்து செல்கிறேன்" என்று கூறியதற்கு அவர் பரவாயில்ல என்று கூறி மறுத்துவிட்டார். மிகப்பெரிய ஆளுமை கொண்ட நபர் இப்படி நடந்துகொண்டது வியக்க வைத்தது” என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி அஜித்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.