பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் ராதிகா ஆப்தே. இந்தியில் அறிமுகமான இவர், பெங்காலி, மராத்தி, தெலுங்குவை தொடர்ந்து தமிழிலும் நடித்துள்ளார். 2021-ல் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான 'தோனி' என்ற படத்தில் அறிமுகமான இவர், 2013-ல் கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' படத்திலும் நடித்துள்ளார்.
அதன்பின்னர், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2016-ல் வெளியான 'கபாலி' படத்தில் நடித்தது மூலம் மேலும் பிரபலமானார். அதன்பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியில் மட்டுமே நடித்து வருகிறார். இருப்பினும் அனைத்து மொழி படங்களிலும் வாய்ப்புகள் கிடைத்தால் அதில் தொடர்ந்து நடித்து வரும் இவருக்கு 2021-ல் திருமணமானது.
திருமணம் முடிந்தும் தொடர்ந்து திரைத்துறையில் இருந்து வரும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காதல் ஜோடிகள் மற்றும் தம்பதியினருக்கு அறிவுரை வழங்கினார். அதாவது "பொதுவாக கணவன் - மனைவியோ அல்லது காதலன் காதலியோ தங்களுக்குள் ஏதாவது சண்டை சச்சரவு ஏற்பட்டால் மூன்றாம் மனிதரின் ஆலோசனையை பெறக்கூடாது. அது காதல் மற்றும் இல்லற வாழ்க்கைக்கு மிகவும் ஆபத்தானது
அப்படி மூன்றாம் மனிதர் ஒருவரது ஆலோசனையை நாம் பெற்று எப்போது அதனை வரவேற்கிறோமோ அப்போதே உங்கள் உறவில் விரிசல் ஆரம்பமாகிவிட்டது என்றே சொல்லலாம்" என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஆண் நடிகர்களுக்கு இணையாக பெண் நடிகைகளுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இப்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் சமமாக இருக்கின்றனர். சினிமா துறையில் பணியாற்றும் நடிகர்களுக்கு இணையாக பெண் நடிகைகளுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும். பெயர், புகழ் என அனைத்திலும் நடிகர்களுக்கு இணையாக சம உரிமை வேண்டும். இதற்காக சினிமாத்துறையில் பெண்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். இது வரவேற்கத்தக்க விஷயம்.
பெண் முக்கியத்துவம் உள்ள படங்கள் அதிகம் வருகின்றன. இதன் மூலம் கதாநாயகிகளுக்கு, ஹீரோக்களுக்கு சமமான முக்கியத்துவம் கிடைக்கிறது. இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்காகத்தான் இந்தி சினிமாவில் பணியாற்றும் பெண்கள் போராடி வந்தனர்'' என்றார்.
முன்னதாக நடிகை பிரியங்கா சோப்ரா, தான் நடித்த ஹாலிவுட் சீரிஸின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தான் முதல்முறை நடிகருக்கு இணையான சம்பளம் பெற்றதாகவும், இதுவரை இந்திய திரைப்படங்களில் அப்படி பெறவில்லை என்றும் பேசியிருந்தார். இந்த நிலையில் நடிகை ராதிகா ஆப்தேவும் இப்படி ஒரு கருத்தை வைத்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.