சினிமா

“அரச ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் போராட்டம் வென்றதா ?” : எப்படி இருக்கிறது ‘விடுதலை’ திரைப்படம் ?

இந்த வாரத்தின் எதிர்பார்ப்புகுரிய படமாக வெற்றிமாறனின் ‘விடுதலை’ படம் வெளியாகி இருக்கிறது.

 “அரச ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் போராட்டம் வென்றதா ?” : எப்படி இருக்கிறது ‘விடுதலை’ திரைப்படம் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

‘அசுரன்’ என்கிற பெருவெற்றி படத்தை எடுத்த பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் இயல்பாகவே படத்துக்கென எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. முக்கியமாக ‘விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இன்னும் முக்கியமாக நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட சூரி, இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார். கதையின் களமும் முக்கியமான அரசியல் பின்புலத்தை கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாயின. படம் துவங்கப்பட்டு பல மாதங்கள் ஓடி, இறுதியில் படத்தை இரண்டு பகுதிகளாக வெளியிடுவது என முடிவானதும் இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டியது.

இத்தகைய பின்னணியில்தான் நேற்று ‘விடுதலை’ படம் வெளியாகியிருக்கிறது. முதல் காட்சி முடிந்ததிலிருந்து சமூகதளங்களில் ‘விடுதலை’ படம் பற்றிய நேர்மறை விமர்சனங்கள் தொடர்ந்து பதியப்பட்டு வருகின்றன.

 “அரச ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் போராட்டம் வென்றதா ?” : எப்படி இருக்கிறது ‘விடுதலை’ திரைப்படம் ?

என்ன கதை?

அருமபுரி என்கிற ஊரிலுள்ள மலையின் கனிம வளங்களை தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்க்க அரசு முயற்சிக்கிறது. அம்முயற்சியை எதிர்த்து ‘மக்கள் படை’ என்கிற பெயரில் இடதுசாரி போராளிக் குழு இயங்குகிறது.

குண்டு வெடித்து ரயில் தடம்புரண்ட காட்சியிலிருந்து படம் தொடங்குகிறது. அதற்கு காரணம் தாங்கள்தான் என மக்கள் படையினர் போஸ்டர் ஒட்டியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அச்சம்பவம் முடிந்து குமரேசன் என்கிற ஒருவர் காவலர் பணியில் சேரவென வருகிறார். மக்கள் படையை வேட்டையாடும் பணியில் இருக்கும் காவல் படையில்தான் அவருக்கு வேலை. வள்ளலாரின் பக்தராக இருக்கும் குமரேசன் இயல்பாகவே கனிவு நிறைந்தவராக இருக்கிறார். ஆனால் அவர் பணிபுரியும் காவல்துறை கனிவை மறுக்கும் இடமாக இருக்கிறது. குமரேசன் கொள்ளும் கனிவால் உயரதிகாரியுடன் முரண் ஏற்பட, அவரை கட்டம் கட்டி ஒடுக்குகிறார் உயரதிகாரி. மறுபக்கம் குமரேசனின் கனிவால் பழங்குடி பெண் அவர் மீது காதல் கொள்கிறாள். இருவரும் காதலுறவை தொடருகின்றனர்.

இவற்றுக்கிடையில் மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் கனிம அகழ்வுக்கான சூழலுக்கு தேவையான சாலைகள் போடுதல், வசதிகள் மேம்படுத்துதல் முதலிய பணிகளை செய்கிறார். அவற்றுக்கு மக்கள் படையினர் தடையாக இருக்கின்றனர். ஊர் மக்களின் ஆதரவு மக்கள் படைக்கு இருக்கிறது.

 “அரச ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் போராட்டம் வென்றதா ?” : எப்படி இருக்கிறது ‘விடுதலை’ திரைப்படம் ?

தனியார் அகழ்வு நடக்க, மக்கள் படை அழித்தொழிக்கப்பட வேண்டும். அதற்கு அப்படையின் தலைவரான பெருமாள் வாத்தியார் பிடிக்கப்பட வேண்டும். இரண்டு வேலைகளையும் செய்யும் இடத்தில்தான் குமரேசன் பணிபுரிகிறார். அவரது உயரதிகாரியையும் தாண்டி இன்னொரு உயரதிகாரியும் அப்பணியில் இணைகிறார். புதிய உயரதிகாரியின் உத்தரவில் பழங்குடி கிராமம் சூறையாடப்படுகிறது. மக்கள் படைத் தலைவர் பிடிபட்டாரா, உயரதிகாரி ஒடுக்குமுறையை குமரேசன் வென்றாரா என்பதே மிச்சக்கதை.

பெருமாள் வாத்தியாராக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். குமரேசன் பாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார். உயரதிகாரி பாத்திரங்களில் சேத்தன் மற்றும் கவுதமும் ஆட்சியர் பாத்திரத்தில் ராஜீவ் மேனனும் நடித்திருக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவில் இளையராஜா இசையமைக்க, படத்தை வெற்றிமாறன் இயக்கியிருக்கிறார்.

 “அரச ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் போராட்டம் வென்றதா ?” : எப்படி இருக்கிறது ‘விடுதலை’ திரைப்படம் ?

வெற்றிமாறனின் படங்களுக்கு என ஒரு ரசிகர் திரள் உருவாகி இருக்கிறது. தன் படங்களை வெகுஜன படங்களாக மட்டும் எடுக்காமல் அரசியல் சார்ந்த களங்களை வரலாறுடன் இணைத்து கொடுப்பது அவருக்கென ஒரு பெரிய ரசிகர் பரப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. கடந்த ‘அசுரன்’ படத்தில் கீழவெண்மணி சம்பவத்தை சார்ந்த அரசியல் களத்தை உருவாக்கியிருந்த வெற்றிமாறன், இந்த படத்தில் வாச்சாத்தி சம்பவத்தையும் பழங்குடி வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியல் களத்தை உருவாக்கியிருக்கிறார். காவல்துறைக்கும் மக்களுக்கும் இருக்கும் முக்கியமான முரணை முன் வைத்து இந்த அரசியல் களத்தை ஆராய்கிறார் வெற்றிமாறன்.

உலக மூலதனம் பெருகி வந்திருக்கும் நவதாராளவாத காலக்கட்டத்தில் புதிய சமூக ஒழுங்கு உருவாக்கும் ஒடுக்குமுறைகளை எதிர்க்க பல வழிகளை மக்கள் நாடும் நிலை யதார்த்தத்தில் இருக்கிறது. அந்த வழிகளுக்கென ஏற்கனவே இருந்த அமைப்புகளும் இயக்கங்களும் அழித்தொழிக்கப்பட்டு விட்டன. அவை ஏதுமின்றி இன்று மக்கள் தாங்கள் வாழும் நிலம், வாழ்வாதாரம், அவற்றின் வளம் ஆகிய யாவும் கார்ப்பரெட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுவதை தடுக்க முடியாமல் இருக்கின்றனர். மீறி தடுக்க முயலும் மக்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். தேடியழிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழலில் அவர்களுக்கான துணையாக கடந்த காலத்தில் இருந்த தேசிய இன அரசியலையும் இடதுசாரி அரசியலையும் அவற்றுக்குரிய வரலாற்று சம்பவங்களுடன் வைத்து ஒப்பிட்டு ஆராய நம்மை பணிக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

 “அரச ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் போராட்டம் வென்றதா ?” : எப்படி இருக்கிறது ‘விடுதலை’ திரைப்படம் ?

‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் அரச ஒடுக்குமுறையை பதிவு செய்கிறது. அதற்கு எதிராக இயங்கும் பெருமாள் வாத்தியாரும் அவரின் மக்கள் படையும் எந்தளவுக்கு இன்றைய சூழலில் பொருந்தும் வகையில் இருக்கும் என்பதை நாம் ஆராய்ந்து கொள்ளும் விதமாக படத்தின் இரண்டாம் பகுதி இருக்கலாம்.

என்னவாகினும் இயக்குநர் வெற்றிமாறன் மக்களுடன் உரையாடும் அரசியலை பிரதிபலிப்பதற்கான முக்கியமான படமாக ‘விடுதலை’ வெளியாகியிருக்கிறது. அது மக்களின் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. மக்களுக்கும் அதிகாரத்துக்கும் இருக்கும் முரணின் முதல் பகுதியை சுட்டிக் காட்டுவதில் வெற்றிமாறன் வெற்றி கண்டிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories