ராஜ்கிரண் நடிப்பில் வெளியான 'என் ராசாவின் மனசிலே' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக்கு அறிமுகமானவர் தான் நடிகர் வடிவேலு. அந்த படத்திற்கு பிறகு பல்வேறு படங்களில் காமெடி, குணச்சித்திர வேடத்தில் நடித்த இவர், 'போடா போடா புண்ணாக்கு', 'எட்டணா இருந்தா எட்டூரும் என் பாட்ட கேட்கும்..' ஆகிய பாடல்களின் மூலம் பாடகராகவும் அறிமுகமானார்.
கரத்த குரலில் இவர் பாடினாலும், இவரது குரலுக்கும் ரசிகர்கள் குவிந்தனர். அதன் பின்னர், பல படங்களில் ரஜினி, விஜய், அஜித், விஜய், கமல், விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி உள்ளிட்ட பல முன்னனி ஹீரோக்களுடன் காமெடி மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்து புகழ் மேல் புகழ் பெற்றார். இதையடுத்து பெரிய அளவில் பெயர் கொடுத்து இன்றும் நிலைத்து நிற்கும் படமான 'இம்சை அரசின் 23-ம் புலிகேசி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அது அவருக்கு பெரிதாக பெயர் ஈட்டிக்கொடுக்கவில்லை. எனவே மீண்டும் காமெடி தளத்தில் இருந்தார். கிட்டத்தட்ட 35 வருடங்களாக சினி உலகில் நீடித்து இருக்கும் வடிவேலு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில பிரச்னை காரணமாக திரையில் தோன்றாமல் இருந்தார். அதன்பின்னர் தற்போது மீண்டும் தோன்ற தொடங்கியுள்ளார்.
அதன்படி கடந்த ஆண்டு வெளியான 'நாய் சேகர்-ரிட்டர்ன்ஸ்' படத்தின் மூலம் மீண்டும் கம் பேக் கொடுத்தார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் இவர்தான் பாடினார். ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. அதோடு வசூல் மற்றும் விமர்சன ரீதியாக தோல்வியை அடைந்தது. இது ஒரு புறம் வடிவேலுவுக்கு சோகத்தை கொடுத்தாலும், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு மவுசு குறையாமலே இருக்கிறது.
மாரி செல்வராஜின் 'மாமன்னன்' படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்து வந்த இவர், தற்போது ராகவா லாரன்சுடன் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் எப்போது வெளியாகும் என விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க தன்னை தயார் படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் திரைத்துறையில் சாதனை படைத்திருக்கும் மீம்ஸ் நாயகன் வடிவேலுக்கு தற்போது கெளரவு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கிவரும் சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில், பொழுது போக்கு பிரிவின் கீழ் இந்த விருது வழங்கியுள்ளது
இதையடுத்து டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் வடிவேலுவுக்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக நடிகர் ராகவா லாரன்சிற்கு சமூக சேவைக்கான 'டாக்டர்' பட்டத்தை இந்த அமைப்பு வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.