2001-ம் ஆண்டு வெளியான 'சகலக பூம் பூம்' தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து படங்களிலும் நடித்து வந்த இவர், தனது 16 வயதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தெலுங்கு படத்தில் நடித்தார்.
தொடர்ந்து இந்தி, கன்னட படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் 'எங்கேயும் காதல்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு, மாப்பிள்ளை, வேலாயுதம், தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற தமிழ் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தாலும், தெலுங்கு திரையிலும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, உதயநிதி ஸ்டாலினுடன் மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களும் இவருக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. இதனிடையே சுந்தர் சி-யின் அரண்மனை படத்தின் மூலம் பேயாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். அதோடு இவரது நடிப்பில் அண்மையில் 'மகா' என்ற படம் வெளியாகியது.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த இவர், இடையில் பருமணமாக காணப்பட்டார். மேலும் சிறு வயதிலே பெரிய பெண்ணாக காட்சியளித்தார். இதனால் ஹன்சிகா ஹார்மோன் ஊசி எடுத்துக்கொள்வதாக நெட்டிசன்கள் சர்ச்சையை ஏற்படுத்தினர். அதோடு இதனை அவரது தாயாரே ஹன்சிகாவுக்கு ஊசியை செலுத்துவதாகவும் கூறினர்.
இப்படி ஹன்சிகா திரையுலகில் வளரும் சமயத்தில் தொடர்ந்து இது போன்ற கருத்துகளை முன்வைத்தனர். இருப்பினும் இதுகுறித்து ஹன்சிகா தரப்பில் மறுப்பு தெரிவித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும் தொடர்ச்சியாக படங்களில் நடித்துக்கொண்டே, தற்போது திருமணமும் செய்துகொண்டார்.
இவர்களது திருமணம் குறித்த வீடியோ ஹாட்ஸ்டாரில் 'Love Shaadi Drama' என்ற பெயரில் தொடராக வெளியாகிறது. இந்த தொடரில் 2-வது எபிசோட் அண்மையில் வெளியானது. இதில் தன்னை பற்றி வெளியான இந்த வதந்தி குறித்து மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஹன்சிகா, "எனக்கு ஹார்மோன் ஊசி, எனது தாயார் செலுத்தியதாக பரப்பப்பட்ட வதந்தி, என்னை அவர்கள் பிரபலப்படுத்துவதற்கு பயன்பட்டது. இந்த செய்தி எனக்கு 21 வயதாக இருக்கும் போதுதான் இந்த முட்டாள்தனமான செய்தி பரப்பப்பட்டது" என்றார்.
இதனிடையே இதுகுறித்து பேசிய ஹன்சிகாவின் தாய், "இந்த செய்தி உண்மை என்றால், நான் டாடா, பிர்லாவை விட பணக்காரனாக ஆகியிருப்பேன்" என்று நக்கலாக பேசினார். மேலும் "நாங்கள் பஞ்சாபி மக்கள், எங்கள் மகள்கள் 12-16 வயதிலே பெரியவர்களாக வளர்க்கிறார்கள்" என்று தெரிவித்தார். இதன்மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் குறித்து எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.