ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ்வின் பேரன் நந்தமுரி தாரக ரத்னா. இவரது குடும்பமே சினிமாவில் இருப்பதால் இவரும் 2002ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
'பதாத்ரி ராமுடு','அமராவதி', 'நந்தீஸ்வரது', 'மனமந்தா', 'எதிரிலேனி அலாக்செண்டர்','ராஜா செய் தேஸ்தே' உட்படப் பல படங்களில் நடித்துள்ளார். 'அமராவதி' படத்திற்காக ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை வென்றுள்ளார் நந்தமுரி தாரக ரத்னா.
இதையடுத்து முழு நேர அரசியலில் நுழைய முடிவு செய்து தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். இதையடுத்து ஜனவரி 27ம் தேதி சந்திரபாபு நாயுடு மகன் நரலோகேஷி நடத்திய பாதயாத்திரையில் நந்தமுரி தாரக ரத்னா பங்கேற்றுள்ளார்.
இந்த பாதயாத்திரையில் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென அவர் கீழே விழுந்துள்ளார். பிறகு அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு நாராயண ஹருதயாலயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு 23 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இவரின் மரணம் தெலுங்கு சினிமா உலகிலும், அரசியல் வட்டத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நந்தமுரி தாரக ரத்னா நடித்த ஒன்பது படங்கள் ஒரே நாளில் வெளியாகி கின்னஸ் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.