டெல்லியில் பிறந்து வளர்ந்தவரான ஸ்வரா பாஸ்கர் மாணவர் அரசியலுக்கு புகழ்பெற்ற டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். அங்கு படிக்கும்போது அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட ஸ்வரா பாஸ்கர் பின்னர் கடந்த 2009இல் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
தனு வெட்ஸ் மனு, நீல் பட்டி சன்னாட்டா போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ள இவர், நடிகர் தனுஷ் நடித்த பாலிவுட் படமாக ராஞ்சனாவில் முக்கிய பாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயமானார். திரைத்துறையில் இருந்தாலும் சமூக செயல்பாட்டாளராக வலம்வந்த இவர் பல்வேறு அரசியல் விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக மற்றும் இந்துத்துவ கருத்தியலுக்கு எதிராக பல்வேறு அரசியல் கருத்துகளை கூறிய இவர், பாஜக அரசு கொண்டுவந்த சிறுபான்மையினருக்கு எதிரான சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டார். பல்வேறு அரசியல் கட்சிகளும், ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்ட இந்த போராட்ட களத்தில் நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு ன் சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்டிரா மாநில இளைஞர் அணித் தலைவராக உள்ள ஃபஹத் ஜிரார் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறிய நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்துள்ளனர். தனது திருமண நிகழ்வு குறித்து வீடியோ பதிவு ஒன்றை ட்விட்டர் மற்றும் இஸ்டா பக்கங்களில் நடிகை ஸ்வார வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், " சில நேரங்களில் உங்களுக்கு அருகிலேயே இருக்கும் ஒன்றை நீங்கள் தொலைவில் தேடுகிறீர்கள். நாங்கள் அன்பைத் தேடினோம், ஆனால் முதலில் நட்பைக் கண்டோம். பின்னர் எங்களுக்குள் ஒருவரையொருவர் கண்டுபிடித்தோம்! என் இதயத்திற்கு வருக ஃபஹத் ஜிரார் அகமத்! " என பதிவிட்டுள்ளார். இந்த தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.