தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அனுஷ்கா. தமிழில் மாதவனுடன் 'ரெண்டு' என்ற படத்தில் அறிமுகமானார். தெலுங்கு நடிகையான இவர் தெலுங்கில் பல படங்கள் நடித்திருந்தாலும் 'அருந்ததீ' திரைப்படம் இவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது.
தொடர்ந்து இந்த படத்தின் ஹிட்டை தொடர்ந்து தமிழில் விஜயுடன் 'வேட்டைக்காரன்' படத்தில் நடித்தார். தமிழில் இரண்டாவது படமே விஜயுடன் நடித்ததால், இது இவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இருப்பினும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், சிம்பு நடிப்பில் வெளியான 'வானம்' படத்தில் நடித்தார். அந்த படத்தில் இவர் பாலியல் தொழில் செய்து வரும் பெண்ணாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டது.
அதன்பிறகு தமிழில் தெய்வ திருமகள், தாண்டவம், சிங்கம் 1 - 2 - 3, லிங்கா, என்னை அறிந்தால் என தொடர்ச்சியாக படம் நடித்தார். பின்னர் வெளியான பாகுபலி படம் இவருக்கு இந்திய அளவில் அங்கீகாரம் பெற்று தந்தது. தொடர்ந்து பாகுபலி 1& 2 படங்களில் இவர் இந்திய அளவில் அறியப்பட்டார்.
தற்போது பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத இவர் சுமார் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் அரியவகை நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனுஷ்கா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “எனக்கு சிரிக்கும் வியாதி இருக்கிறது. சிரிப்பது ஒரு வியாதிய என நீங்கள் கேட்கலாம். ஆனால், என் நிலை இது தான். நான் சிரிக்க ஆரம்பித்தால் தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை சிரித்துகொண்டே இருப்பேன். என் சிரிப்பை கட்டுப்படுத்தும் சக்தி என்னிடம் இல்லை. இதனால் பல முறை படப்பிடிப்பை கொஞ்ச நேரம் ஒத்திவைக்கும் நிலை கூட உருவாகியிருக்கிறது” என்றார்.
இதனால் அனுஷ்கா ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இது ஒரு அரியவகை நோய் என்றாலும் கேட்பவர்களுக்கு நகைப்பாகவே இருக்கும். இதுபோன்ற பாதிப்பு மிக்க மக்கள் மிக அரிதே. ஹாலிவுட்டில் ஜோக்கர் கதாபத்திரத்தில் நடித்த நடிகருக்கும் இதே பாதிப்பு இருக்கிறது.
சூடோபுல்பார் (Pseudobulbar Affect) என்று சொல்லப்படும் இந்த பாதிப்பு ஒருவர் பார்ப்பதற்கு மிக நார்மலாக இருப்பார். மற்ற எல்லோரையும் போலவே அவர்களுடைய உணர்வுநிலைகளும் சாதாரணமாகத் தான் இருக்கும். ஆனால் சில நேரங்களில் அவற்றை வெளிப்படுத்தும்போது மிக அதிகமாக அவர்களாலேயே கட்டுப்படுத்த முடியாமல் வெளிப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு அதிக மன அழுத்தத்தில் இருந்ததால் மயோசிட்டிஸ் என்ற அரியவகை கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.