பாடலாசிரியர் மதன் கார்க்கி மற்றும் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து இந்தியாவிலேயே முதன்முறையாக, ‘ஸ்கிரிப்டிக்’ (SCRIPTick) என்ற பெயரில் ஓர் திரைக்கதை வங்கியை தொடங்கியுள்ளனர். இந்த திரைக்கதை வங்கியையும் அதன் இணையதளத்தையும் இயக்குநர் பாரதிராஜா திறந்து வைத்துள்ளார்.
தற்போது பெரும்பாலான திரைப்படங்களின் திரைக்கதைகள் சரியில்லாத காரணத்தால் தோல்வி அடையும் திரைப்படங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை தயார் செய்து, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் ஒரு தளமாக 'ஸ்கிரிப்டிக்' தளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் இலக்காக திரைக்கதை எழுத்தாளர்களை உருவாக்குவதும், அவர்களின் பணிக்கு உரிய ஊதியம் வழங்குவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கதைகள் இருந்தாலும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை இந்த குழு தயாரிப்பாளருக்கு வழங்கும். இதன் மூலம் சுவாரஸ்யமில்லாத திரைக்கதைகள் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது. இந்த குழுவில், திரைப்பட இயக்குனர், கதாசிரியர் மற்றும் திரைக்கதை நிபுணர்கள்கள் இடம்பெறுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய ஸ்கிரிப்டிக் இணை நிறுவனர் கோ. தனஞ்ஜெயன் "சினிமா துறையில் சிறந்த திரைக்கதைகள் வெளிக்கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்டுகளாக எனக்குள் இருந்தது. திரைக்கதை நிபுணர்களின் பல்வேறு அளவுகோல்களை பூர்த்தி செய்யும் நல்ல திரைக்கதைகளைக் கண்டுபிடிப்பது தான் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். அத்தகைய திரைக்கதைகளைப் பெற நிபுணர்களின் பங்களிப்போடு ஸ்கிரிப்டிக் திரைக்கதை வங்கி தொடங்கப்படுகிறது. திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் இது ஒரு முன்னோடி முயற்சியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” எனக் கூறினார்.
மேலும், இது தொடர்பாக பேசியிற் ஸ்கிரிப்டிக் இணை நிறுவனர் மதன் கார்க்கி, "புதிய பாதையை உருவாக்கும் இதுபோன்ற திரைக்கதைகளை வழங்க நாங்கள் தொடங்கும் கூட்டு முயற்சி ஸ்கிரிப்டிக் ஆகும். தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த திரைப்படத் துறைக்கும் பயனுள்ளதாக இது இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.