சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் நடித்துள்ள பதான் படம் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படம் உலக அளவில் வெளியாகியுள்ளது.
உலகம் முழுக்க சுமார் 100 நாடுகளில், 2500 திரையரங்குகளில் 8,000 ஸ்க்ரீன்களிலும், அதில் இந்தியாவில் 5,500 ஸ்க்ரீன்களிலும் திரையிடப்பட்ட இந்த படம், வெளியாகிய முதல்நாளே ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
தற்போதுவரை திரையரங்கில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த படம் சுமார் 850 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளது. முன்னதாக இந்த படத்தில் இடம்பெற்றிருந்த 'Besharam Rang' என்ற பாடலில் தீபிகா உடை சர்ச்சையை ஏற்படுத்தியது. அதோடு இந்த படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் இந்துத்துவ கும்பல் போராட்டம் நடத்தி வந்தது. தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் வெளியாகிய இந்த படம் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது.
வெளியில் பெரிய எதிர்ப்புகளை சந்தித்தாலும், எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு முக்கிய திரைக்கலைஞர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். அதில் ஒருவர்தான் நடிகர் பிரகாஷ்ராஜ். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் காஷ்மீர் பைல்ஸ் மற்றும் பதான் படங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாத்ருபூமி சர்வதேச விழாவில் நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், "என்பது போல் தான் பதான் திரைப்படத்தை தடை செய்ய நினைத்தவர்கள் பேச்சும். அவர்கள் அவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தும் பதான் படம் 700 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது.
பதான் படத்தை தடை செய்ய நினைத்த இந்த முட்டாள்கள், மதவெறியர்கள், மோடியின் (நரேந்திர மோடி) படத்தை 30 கோடி ரூபாய் வசூலிக்கும் அளவுக்கு கூட பார்க்கவில்லை. எல்லோருக்கும் தெரிந்ததுபோல் அவர்கள் குரைக்கிறவர்கள், கடிக்கமாட்டார்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "காஷ்மீர் பைல்ஸ் என்ற பிரச்சார படத்தை எடுத்தார்கள். அந்த படத்தை பார்த்துட்டு சர்வதேச கலைஞர்கள் காரி துப்பினார்கள். அப்படியும் கூட இவர்களுக்கு எல்லாம் புத்தியே வரவில்லை.
காஷ்மீர் பைல்ஸ் படத்தை இயக்கிய டைரக்டர் இந்த படத்துக்கு ஏன் ஆஸ்கர் கொடுக்கவில்லை? என்று கேள்வி வேறு எழுப்பினார். இந்த படத்திற்கு ஆஸ்கர் இல்லை.. பாஸ்கர் விருது கூட கிடைக்காது" என்று நக்கலாக பேசினார். பிரகாஷ்ராஜின் இந்த பேச்சு இணையத்தில் தற்போது பேசுப்பொருளாக அமைந்துள்ளது.