தமிழ் சினிமாவில் 1995ம் ஆண்டு வெளியான 'முறை மாப்பிள்ளை' படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். இவர் பல படங்கள் நடித்து இருந்தாலும் 'என்னை அறிந்தால்' படத்தின் 'விக்டர்' கதாபாத்திரம் தான் இவருக்குப் பெரிய அறிமுகத்தை கொடுத்தது.
பின்னர் 'குற்றம் 23', 'செக்கச் சிவந்த வானம்', 'தடம்' போன்ற அடுத்தடுத்த மூன்று படங்களும் இவருக்கு வெற்றியைக் கொடுத்தது. இதையடுத்து கதாநாயகன் மற்றும் குணச்சித்திர நடிகர் என இரண்டிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
இந்நிலையில் 'மதராசப்பட்டினம்', 'செய்வ திருமகன்' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த ஏ.எல்.விஜய் நடிகர் அருண் விஜயை வைத்து அச்சம் என்பது இல்லையே என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
சமீபத்தில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சி ஒன்றில் நடித்தபோது நடிகர் அருண் விஜய்க்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்காக, கேரளா திருச்சூரில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து நடிகர் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகிச்சை பெறும் புகைப்படங்களோடு இதனை தெரிவித்துள்ளார். அதில், "நான்காவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறேன். இப்போது நன்றாக உணர்கிறேன். விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்" எனவும் தெரிவித்துள்ளார்.