பிரபல பின்னணி இசைப்பாடகி வாணி ஜெயராம் (78) இன்று திடீர் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பிறந்த இவரது இயற்பெயர் கலைவாணி. கலைவாணி என்பதால் தானோ என்னவோ கலையான இசையில் ஆர்வம் மிக்கவராக இருந்தார்.
தொடர்ந்து இசை கற்று வந்த இவர், 1971-ல் இந்தியில் வெளியான 'குட்டி' என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஓடியா என 19 மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். ஒரு பக்கம் திரையுலகில் இருந்தாலும், தனியாக ஆல்பம், பக்தி பாடல்கள் உள்ளிட்டவையையும் பாடி வந்துள்ளார்.
தமிழில் முதன்முதலாக 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் எம்.எஸ். விசுவநாதன் இசையில், கவிஞர் வாலி எழுத்தில் வெளியான 'மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும்..' என்ற பாடலை பாடி பிரபலமானார். தொடர்ந்து எல்லா வகையான பாடல்களையும் பாடி மக்கள் மனதில் தனி இடத்தையும் பிடித்தார்.
தொடர்ந்து மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ள இவர், தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, உள்ளிட்ட மாநில விருதுகளையும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக கலையுலகில் உயரிய விருதாக கருதப்படும் பத்ம விருதையும் இந்தாண்டு ஒன்றிய அரசு இவருக்கு அறிவித்தது.
அண்மையில் விருது அறிவிக்கப்பட்டதால் இவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வந்துது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், தலைவர்கள், கலைஞர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இவரது மரணம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற திருமதி வாணிஜெயராம் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்து உலகம் முழுக்க தமது இன்னிசையின் இனிமையால் புகழ் பெற்றவர். தமிழ் உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அழியாப் புகழ்பெற்ற பாடல்களைப் பாடி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர்.
அண்மையில் அவருக்கு ‘பத்மபூஷண்’ விருது அறிவிக்கப்பட்ட போது எனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன். அறிவிக்கப்பட்ட விருதைப் பெறும் முன்னரே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது பெரும் துயரை அளிக்கும் செய்தியாகும்.
பழம்பெரும் பின்னணிப் பாடகியான திருமதி வாணிஜெயராம் அவர்களின் மறைவு, இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திருமதி வாணிஜெயராம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.