தமிழில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் ஆரம்பத்தில் நடிக்க தொடங்கிய காலத்தில் பெரிய பெயர் கொடுத்த படம் தான் 'பையா'. இவரது நடிப்பில் மூன்றாவதாக வெளியான இந்த படம் கடந்த 2010-ல் திரையரங்கில் வெளியானது.
என். லிங்குசாமி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த படத்தில் வெளியான அனைத்து பாடல்களுமே பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.
அப்போதுள்ள காலத்தில் 'அடடா மழைடா..' பாடல் அனைத்து பள்ளி ஆண்டுவிழாக்களின்போது மாணவிகள் நடனமாடி மகிழ்வர். தொடர்ந்து காதலிக்கும்போது ஒரு பாடல், காதல் தோல்வி தழுவியதாக ஒரு பாடல் என பாடல்களே பெரிய பெயரை கொடுத்தது.
ஹீரோவும், ஹீரோயினுமும் பெங்களுரிலிருந்து, மும்பைக்கு காரில் பயணம் செய்வதை மையமாக வைத்து திரைக்கதை எடுக்கப்பட்டு இருந்த இந்த படம், முழுக்க முழுக்க கார் பயணித்திலே எடுக்கப்பட்டது. ரசிகர்கள், இளைஞர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்திற்கு பிறகு கார்த்திக்கு பெண் ரசிகர்கள் ஏராளமாக உருவாகினர்.
இதையடுத்து இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். இருப்பினும் இந்த படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அதன்பிறகு லிங்குசாமியும், வேட்டை, வாரியர், அஞ்சான், சண்டக்கோழி 2 என படங்களை இயக்கிவிட்டார். மேலும் கார்த்தியும் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகராகவே ஆகி விட்டார்.
பையா படம் வெளியாகி சுமார் 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் அடுத்த பாகம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் அடுத்த பாகத்தை விரைவில் லிங்குசாமி எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதில் கார்த்திக்கு பதில் ஆர்யாவும், தமன்னாவுக்கு பதில் போனி கபூர், ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூரும் நடிக்கவுள்ளதாகவும் கிசுகிசுக்க படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகிவில்லை.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியான இந்த தகவலுக்கு தயாரிப்பாளரும், ஜான்வி கபூரின் தந்தையான போனி கபூர் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அன்பார்ந்த ஊடக நண்பர்களே.. ஜான்வி கபூர் தற்போது எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு தெரிவித்து கொள்கிறேன். பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.