தமிழில் முன்னணி காமெடி நடிகர்களில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர்தான் நடிகர் சந்தானம். லொள்ளு சபாவில் தொடங்கி, வெள்ளித்திரை வரை வளர்ந்து வந்துள்ளார் சந்தானம். ஆரம்பத்தில் சைடு ரோல் காமெடி செய்து வந்த இவர், முழு காமெடியனாக காட்சியளிக்கப்பட்டார்.
தொடர்ந்து ஹீரோக்களுக்கு பக்கா காமெடி நண்பனாக கதாபாத்திரம் நடித்து வந்த இவர், அதன்பிறகு காமெடி மட்டுமே இருக்கும் படத்தில் தன்னிச்சையாக நடித்தார். இவர் நடிப்பில் வெளியான 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், அதன்பிறகும் சில படங்களில் காமெடியனாக நடித்தார்.
பிறகு இவர் முழுநேர படங்களில் ஹீரோவாக நடிக்க எண்ணி, தற்போது வரை நடித்து வருகிறார். அதுவும் முழு காமெடி, ஹாரார் காமெடியாகவே இருந்தது. தில்லுக்கு துட்டு, A1, டிக்கிலோனா என பல படங்கள் நடித்துள்ளார். இப்படி காமெடி மட்டுமே இருக்கும் படத்தில் நடித்து வந்த இவர், குளுகுளு என்ற படத்தில் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்தார். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் வரவேற்பை பெறவில்லை.
அண்மையில் வெளியான 'ஏஜென்ட் கண்ணாயிரம்' படமும் ரசிகர்களை பெரிதளவு கவரவில்லை என்றே கூறலாம். இருப்பினும் பின்வாங்காத சந்தானம் நல்ல கதை கிடைத்தாலும் நடிக்க ஆர்வம் காட்டித்தான் வருகிறார்.
இந்த தற்போது சந்தானம் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது. அந்த படத்தின் பெயரானது 'வடக்குப்பட்டி ராமசாமி'. சந்தானம் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற 'டிக்கிலோனா' படத்தை இயக்கிய கார்த்திக் யோகி தான், இந்த படத்தையும் இயக்கவுள்ளார்.
இந்த 'வடக்குப்பட்டி ராமசாமி' என்ற பெயர், 1993-ம் ஆண்டு பிரபு, குஷ்பு, ரோஜா, கவுண்டமணி , செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'உத்தமராசா' திரைப்படத்தில் கவுண்டமணி கூறும் வசனம் ஆகும். வடக்குப்பட்டி ராமசாமியிடம் எப்படியாவது கொடுத்த கடனை வசூலிக்க முயன்று கவுண்டமணி படாத பாடு படுவார். இந்த வசனமே சந்தானத்தின் தலைப்பாக மாறியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக இதே போல் 'ஜென்டில்மேன்' படத்தில் கவுண்டமணி - செந்தில் காமெடியில் வரும் வார்த்தையான 'டிக்கிலோனா' என்ற வார்த்தையை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் வெளியான படத்தின் பெயராக வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.