தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம்தான் 'வாரிசு'. திரையரங்கில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த படத்தில் விஜயுடன், ஜெயசுதா, ராஷ்மிகா, ஷ்யாம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் தெலுங்கு ரிலீஸ் நாளை வெளியாகவுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து விஜயின் 67-வது படமானது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். விஜய் லோகேஷின் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்காக விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி லோகேஷ் ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் பூஜையும் இரகசியமாக அண்மையில் நடைபெற்றது.
இந்த நிலையில் கோவையில் வருமானவரித்துறை சார்பில் தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு இளம் தொழில் முனைவோர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விருந்தினராக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயின் 67-வது படம் குறித்து பதிலளித்தார். அப்போது பேசிய அவர் ,“'வாரிசு' படம் வெளியாவதை ஒட்டி 'தளபதி 67' பட அப்டேட் எதுவும் கொடுக்காமல் இருந்தோம். ஆனால் தற்போது படம் வெளியாகிவிட்டது. எனவே இன்னும் 10 நாட்களில் ‘தளபதி 67' அப்டேட் வெளியாகும். தற்போது படபிடிப்பு நடைபெற்று வருகிறது. தீபாவளி வெளியீடாக வருமா என்பதெல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.
தொடர்ந்து தமிழ்நாட்டை, தமிழகம் என்று சொல்ல விரும்புகிறீர்களா ? அல்லது தமிழ்நாடு என்று சொல்ல விரும்புகிறீர்களா ? என்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு "'தமிழ்நாடு' என்றே சொல்ல விரும்புகிறேன்" என்று பதிலளித்தார்.