தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுத்து இருக்கிறார் பா.ரஞ்சித். இவர் இயக்கிய 'அட்டக்கத்தி','மெட்ராஸ்', 'கபாலி','காலா','சார்பட்டா பரம்பரை' படங்கள் வெற்றியைப் பெற்றது. அது மட்டுமல்லாது இவரது எல்லா படங்களும் விளிம்புநிலை மக்களின் எழுச்சியை பற்றி பேசுவதாக இருக்கும். அதனாலே இவரது படங்கள் சமூகத்தளத்தில் எப்போதுத்ம பேசு பொருளாகவே இருக்கும்.
தன்னால் மட்டுமே தமிழ் சினிமாவிற்கு நல்ல படங்களைக் கொடுத்து விட முடியாது என நினைத்த இயக்குநர் பா.ரஞ்சித் தனது இயக்கத்துடன் சேர்ந்து படங்களையும் 'நீலம் புரொடக்சன்ஸ்' என்ற பெயரில் தயாரித்து வருகிறார்.
இவரின் இந்த தயாரிப்பில் 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு', 'குதிரைவால்' உள்ளிட்ட படங்கள் வெளியாகி மக்களின் கவனத்தைப் பெற்றது. அந்த வகையில் தற்போது யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தைத் தயாரித்துள்ளார்.
'பொம்மை நாயகி' - தமிழ் சினிமா இதுவரை தொடாத புதிய கதைக் களங்களையும், காட்சிப்படுத்தப்படாத மனிதர்களையும் தாங்கி வரும் படைப்பாக வெளிவருகிறது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்கியுள்ளார். நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். மேலும் ஒரு பெண் குழந்தையின் தந்தை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் யோகிபாபு.
இவருடன் இணைந்து ஸ்ரீமதி, ஜி.எம்.குமார், ஹரி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அதிசயராஜ் ஒளிப்பதிவு. சார்பட்டா பரம்பரையின் மூலம் கவனம் ஈர்த்த செல்வாவின் படத்தொகுப்பு. 'ஜீவி', 'எட்டு தோட்டாக்கள்', 'ஐரா','களவு' ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைப்பு. அதோடு கதைக்கு வலுசேர்க்கும் விதமாக 'பொம்மை நாயகி' படத்தின் பாடல்களைப் பாடலாசிரியர் கபிலன் எழுதியுள்ளார்.
இப்படம் வரும் பிப்ரவரி 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், 'அடியே ராசாத்தி' என்று படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.
தந்தை - மகளுக்கான பாசப்பிணைப்பினை காட்டும் வகையில், கிராமப்புற பின்னணியில் காட்சியமைக்கப்பட்டுள்ளது இப்பாடல். யோகிபாபு நடிப்பு மட்டுமில்லாது, கவிதை போன்று அமைக்கப்பட்டுள்ள காட்சியமைப்புகளும் இப்பாடலுக்கு பலமாக அமைந்துள்ளது.
‘தோள் மீது தோள் சாயும் பாவாடை சாமி ; எனைவிட்டு நீ போனால் தாங்காது பூமி’ என்கிற வரியும், பாடலின் இறுதியில் வருகிற ‘கடவுள் குழந்தை இரண்டும் ஒரு நேர் கோடு ; கடவுள் விடவும் குழந்தை என் தாய் வீடு’என்கிற வரியும் மனதைக் கனக்கச்செய்யும் வகையில் அமைந்துள்ளது.
வாரிசு, துணிவு என இரு பெரும் நடிகர்களின் படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் நடக்கும் ரசிக சண்டைகளைத் தாண்டி இப்பாடல் யூட்யூப்பில் ரசிக்கத்தக்க வரவேற்பைப் பெற்று வருகிறது என்றால் அது மிகையல்ல.