பாலிவுட்டில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் சோனு சூட். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்த இவர், தமிழில் டேனி என்றே அறியப்படுவார். சிம்பு நடிப்பில் வெளியான 'ஒஸ்தி' படத்தில் வில்லனாக நடித்த இவர் தமிழ் திரை ரசிகர்களுக்கு மறக்க முடியாத நடிகர்களில் ஒருவரானார்.
தொடர்ந்து பல்வேறு படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், பொது சேவைகளை செய்து பொதுமக்கள் மத்தியில் நிஜ ஹீரோவாக மாறினார். குறிப்பாக கொரோனா ஊரடங்கு சமயத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.
தொடர்ந்து இவர் செய்து வரும் உதவிகள், சிலர் மத்தியில் விமர்சங்களையும் எழுப்பி வருகிறது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாத இவர், இயலாதவர்களுக்கு தன்னால் முடிந்த அளவு உதவி செய்து வருகிறார்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சோனு, சமீபத்தில் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் சோனு, ஓடும் இரயிலில் வாசலில் நின்று ஜாலியாக காற்று வாங்கி கொண்டு பயணம் செய்வது இடம்பெற்றிருந்தது.
இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும், வடக்கு இரயில்வே இதற்கு பதிலளிக்கும் வகையில் ட்வீட் ஒன்றை செய்துள்ளது.
அதில், "லட்சக்கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். இரயிலில் வாசலில் அமர்ந்து பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. உங்களது வீடியோ தவறான செய்தியை நாட்டிற்கு கொடுக்கும். இது மாதிரியான வீடியோ உங்களது ரசிகர்களுக்கு தவறான தகவலை கொடுக்கும். தயவு செய்து இது போல் செய்யாதீர்கள். பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து இதற்கு பதிலளித்த சோனு, "மன்னிக்கவும், சும்மா அங்கேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் இரயிலின் கதவுகளுக்கு அருகில் அமர்ந்து செல்லும் அந்த லட்சக்கணக்கான ஏழை மக்கள் எப்படி உணருவார்கள். இந்தச் செய்திக்கும், நாட்டின் இரயில்வே அமைப்பை மேம்படுத்தியதற்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி சோனு வெளியிட்டு ட்வீட்டுக்கு, இரயில்வே நிர்வாகம் நேற்று கண்டனம் தெரிவித்துள்ளது. இரயில்வே நிர்வாகத்திற்கு சோனு பதிலளித்த ட்வீட் தற்போது வைரலாகி, "சோனு உண்மையில் நன்றி சொல்கிறாரா அல்லது இரயில்வே நிர்வாகத்தை கலாய்க்கிறாரா ?" என்று இணையவாசிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.