மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்த 'மாமனிதன்' என்ற ஆவணப்படம் சென்னையில் உள்ள மினி உதயம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் திமுக துணைபொதுச் செயலாளரும், எம்.பி-யான கனிமொழி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து படம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, பதான் பட பாடல் சர்ச்சை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "காவி என்பது ஒரு கலர். அதை ஒரு இயக்கத்திற்கு சொந்தம் என்று கொண்டாடுவது தவறு. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என சில மாநிலங்களில் கூறி வருகிறார்கள்.
நிறைய திரைப்படங்களில் கருப்பு ஆடைகள் அணிந்து வில்லனாக நடிக்கிறார்கள். அப்பொழுது திராவிடர் கழகத்தினர் வில்லன்களா? சினிமா துறையை பொறுத்தவரைக்கும் சுதந்திரமாக அவர்கள் படம் எடுக்க வேண்டும். குறுகிய கண்ணோட்டத்தோடு படத்தை தடை செய்ய சொல்வது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல" என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், "இதுவரை ஆளுநர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20-க்கும் மேற்பட்ட தீர்மானங்களுக்கு தற்போது வரை ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் இருக்கிறார். தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே நிலைதான். ஆன்லைன் விளையாட்டால் வாரத்திற்கு இரண்டு மரணங்கள் வரை நிகழ்கிறது மனிதாபிமான அடிப்படையில் கூட அவர் இதற்கு செவிசாய்க்கவில்லை" என்றார்.
பிரபல பாலிவுட் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம் தான் 'பதான்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படம், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி வெளியாகிவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் Besharam Rang என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், இந்த பாடல் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. இந்த பாடல் முழுவதும் தீபிகா, பிகினி உடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். அதோடு அவர் ஆரஞ்சு கலர் துணியில் பிகினி உடை அணிந்துள்ளார். அதனை இந்துத்துவ கும்பல் தங்களது பெருமைக்குரிய காவி உடையை அவமதிக்கும் செயலில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக அமைச்சர்கள், இந்துத்துவ கும்பல் பலரும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதோடு இந்த படத்திற்கு தடை செய்ய வேண்டும் எனவும், இப்படம் திரையிடப்பட்டால் திரையரங்கை கொளுத்துவோம் எனவும் மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பாக இருந்தாலும், நடிகர் பிரகாஷ் ராஜ், சூர்யா சேவியர், திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் இந்துத்துவ கும்பலுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.