இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் டைட்டானிக். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் 11 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அவதார்.
இந்த படம் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டை செய்தது. அதோடு உலகம் முழுவதும் இந்த படத்தின் வெற்றி சாதனையை தற்போது வரை எந்த படமும் முறியடிக்கவில்லை. இப்படி சாதனை பட்டியலில் தற்போது வரை முதல் இடத்தில் இருக்கும் இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவர் மத்தியிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய முன்தினம் (16.12.2022) வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் 2D, 3D, IMAX ஃபார்மட்களில் வெளியாகியிருக்கும் இந்த படம் அனைத்து மாநிலங்களிலும் வெளியானது. இந்த நிலையில் தங்கள் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களை கவர தனியார் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்கள், புதிய யுக்தி ஒன்றை கையாண்டுள்ளனர். அதன்படி அவதார் படத்தில் வரும் கதாபாத்திரங்களின் உருவங்களாக மாறி ரசிகர்களை வரவேற்று வருகின்றனர்.
அதாவது புதுவை - கடலூர் சாலையில் அமைந்துள்ள தனியார் வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில், அவதார் 2 திரையிடப்பட்டு வருகிறது. இதனால் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களை கவர எண்ணிய திரையரங்கு ஊழியர்கள் புதிய திட்டம் தீட்டினர். அதன்படி அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் சிலர், தாங்களே அவதார் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல் மாறுவேடமிட்டு ரசிகர்களை வரவேற்று வருகின்றனர்.
அவதார் போல் வேடம் அணிந்து வரவேற்பு வழங்குபவர்களிடம் அங்கு வரும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக ஆந்திராவில் அவதார் 2 படம் பார்த்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவதார் படத்திற்கு ஆவலாக இருந்த ஐதராபத்தில் உள்ள சில ரசிகர்கள் அப்படத்தை காண, திரையரங்கிற்கு அவதார் வேடம் அணிந்து சென்றுள்ளனர்.