இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் டைட்டானிக். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் 11 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அவதார்.
இந்த படம் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டை செய்தது. அதோடு உலகம் முழுவதும் இந்த படத்தின் வெற்றி சாதனையை தற்போது வரை எந்த படமும் முறியடிக்கவில்லை. இப்படி சாதனை பட்டியலில் தற்போது வரை முதல் இடத்தில் இருக்கும் இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவர் மத்தியிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் 2D, 3D, IMAX ஃபார்மட்களில் வெளியாகவிருக்கும் இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிட பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. அந்த தகவலை உறுதி செய்யும் வகையில் இன்று வெளியாகியுள்ள இந்த படம் தமிழக்தில் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்படவில்லை.
அதாவது அவதார் படத்தின் விநியோகிஸ்தர்களுடனான (Disney Studios) ஒப்பந்ததில் உடன்பாடு இல்லாத காரணத்தினால் GK, வெற்றி உள்ளிட்ட சில திரையரங்குகள் இந்த படத்தை திரையிடவில்லை. இது குறித்து தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியனின் கூறுகையில், "ஹாலிவுட் படத்திற்கு பொதுவாக வரும் லாபத்தில் இருந்து விநியோகிஸ்தர்களுக்கு 50 சதவீதம் மட்டுமே கொடுத்துள்ளோம். ஆனால் இந்த முறை அவர்கள் 70% பங்கு கேட்டனர்.
அவர்களுடன் இது குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினோம். ஆனால் அதற்கு அவர்கள் ஒத்து வரவில்லை என்ற காரணத்தினால், தற்போது தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சில திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படவில்லை. தமிழகத்தில் சுமார் 600-700 திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்குப் பதிலாக, தற்போது வெறும் 200-250 திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்படுகிறது. திருச்சி, கோயம்புத்தூர், வட ஆற்காடு, சேலத்தில் என பெரும்பாலான இடங்களில் உள்ள திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படவில்லை" என்றார்.
இந்தியாவில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த படம் தமிழ்நாட்டில் GK சினிமாஸ், வெற்றி, ஸ்ரீ சக்தி சினிமாஸ் உள்ளிட்ட சில திரையரங்குகளில் திரையிடப்படவில்லை.
இது குறித்து AGS சினிமாஸ் உரிமையாளர் அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில், "AGS சினிமாஸில் Avatar The Way Of Water திரையிட முடியாது என்பதில் வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். விநியோகஸ்தரர்களுடனான பேச்சுவார்த்தை ஒத்துவரவில்லை. இந்தப் படத்தைப் பெரிய திரையில் பார்க்கத் தவறிவிடுவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து வெற்றி தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "விதிமுறைகளில் கருத்து வேறுபாடு காரணமாக வெற்றி திரையரங்கில் அவதார்2 திரையிடப்படவில்லை. வழக்கமான ஹாலிவுட் விதிமுறைகளிலிருந்து (Endgame உட்பட) நான் பிரீமியத்தை வழங்கியிருந்தாலும், விநியோகம் அவர்களின் நிலைப்பாட்டில் இருந்து விலகத் தயாராக இல்லை. கடந்த காலத்தில் டிஸ்னிக்கு நாங்கள் ஆதரவாக இருந்தோம். இருப்பினும் இது ஒரு பிசினஸ்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சென்னை போரூர் GK சினிமாஸ், நிர்வாக இயக்குநர் ரூபன் மதிவாணன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த படத்தை (அவதார் 2) திரையிடுவதற்கு செய்த முதலீடுகள் மற்றும் அப்கிரேட்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. சில தியேட்டர் உரிமையாளர்கள் லட்சக்கணக்கில் செலவழிக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அவதார் 2 படம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களிலும் சில திரையரங்குகளில் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.