மலையாளத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியான ‘ஓம் சாந்தி ஓசனா’ படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் ஜூட் ஆண்டனி. அந்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்த நிலையில், இவர் பெரிய அளவில் பிரபலமானார். தொடர்ந்து 'ஒரு முத்தாஸி கதா’, ‘சாராஸ்’ படங்களை இயக்கியுள்ளார்.
இதை தொடர்ந்து அவரது இயக்கத்தில் அடுத்தாக உருவாகும் படம் ‘2018’. கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 483 பேர் உயிரிழந்தனர். இதை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், குஞ்சகோ போபன், ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, கலையரசன், நரேன், லால், இந்திரன்ஸ், அஜு வர்கீஸ், தன்வி ராம், ஷிவதா, கௌதமி நாயர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி பங்கேற்றார். அப்போது விழாவில் பேசிய அவர், படத்தையும் இயக்குநரையும் பாராட்டி பேசினார். மேலும் "இயக்குநர் ஜூட் ஆண்டனி தலையில் முடி இல்லாவிட்டாலும், அவருக்கு அதிகமான மூளை இருக்கிறது. டீசரைப் பார்த்தேன். சிறப்பாக வந்துள்ளது" என்று கிண்டலாக தெரிவித்தார்.
பொது மேடையில் ஒரு பிரபலம், மற்றொரு பிரபலத்தை உருவ கேலி செய்துள்ளது அனைவர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியது. மேலும் இது சர்ச்சையாக வெடித்தது. இந்த சம்பவம் குறித்து இயக்குநர் ஜூட் ஆண்டனி, தனது சமூக வலைதள பக்கத்தில், "நடிகர் மம்முட்டியின் கருத்து குறித்து எனக்கு எந்தக் கவலையும் அளிக்கவில்லை. இதனை ஊதிப் பெரிதாக்க வேண்டாம். இதை அப்படியே விட்டு விடுங்கள்.எனக்கு முடி இல்லாத சோகம் என் குடும்பத்துக்கோ எனக்கோ இல்லை. இப்போது என் முடி உதிர காரணமான பெங்களூர் கார்ப்பரேஷன் வாட்டர் மற்றும் பல்வேறு ஷாம்பு கம்பெனிகளை எதிர்த்து அக்கறை உள்ளவர்கள் குரல் கொடுக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து நடிகர் மம்முட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “அன்பர்களே, '2018' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் 'ஜூட் ஆண்டனியை' பாராட்டி உற்சாகத்தில் பயன்படுத்திய வார்த்தைகள் சிலரை காயமடையச் செய்ததற்கு வருந்துகிறேன். அத்துடன் இனி வருங்காலத்தில் இதுபோன்று நடக்காமல் பார்த்துகொள்வதில் கவனமாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன். நினைவூட்டிய அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் ஜூட் ஆண்டனி மலையாளத்தில் வெளியான பிரேமம், மின்னல் முரளி, சுந்தரி கார்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.