Big Short என ஒரு படம்!
2005ம் ஆண்டு அமெரிக்காவில் நடப்பதாக சொல்லப்படும் கதை!
அமெரிக்காவின் வங்கிகள் கொடுக்கும் வீட்டுக் கடன்களால் மொத்த வங்கித்துறையுமே வீழ்ந்து போகப்போகிறது என ஒரு மூன்று பேர் முன் அனுமானிக்கிறார்கள். பிறகென்ன, அதற்கேற்றார்போல் முதலீடுகளை செய்து, 2008ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சி நிகழ்ந்ததும் தங்களின் முதலீடுகளை விற்ற பணக்காரர்களாகி விடுவதுதானே கதை என கேட்டால், அது மட்டுமல்ல கதை என்பதே அப்படத்தின் சிறப்பு.
வாங்கும் சக்தி இல்லாமல் மக்களை கடனாளிகளாக ஆக்குவது மட்டுமே குறிக்கோளாக இயங்கும் வங்கிகள், முதலாளித்துவம் கொடுக்கும் போட்டியால் அதிக கடன்களை கொடுக்கும் இடத்துக்கு செல்கின்றன. ஒரு கட்டத்தில், கடன் அடைக்கமுடியாதவர்களுக்கும் கணக்குக்காக கடன் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். உச்சக்கட்டமாக கடனை அடைக்கமுடியாதவர்களுக்கு பல கடன்களை கொடுக்கும் கட்டத்தை வங்கித்துறை அடைகிறது. கடன் அடைக்க முடியாமல் போவது அதிகமாக அதிகமாக வங்கிகள் நிதியை இழக்கும் என முன் அனுமானிக்கிறார்கள் கதை மாந்தர்கள். நாம் நினைக்கும்படியே ‘எரியும் வீட்டில் கொள்ளி எடுப்பது’ போல் முதலீடுகளை போட்டுக் கொள்கிறார்கள். அதற்கு பிறகு நடப்பதுதான் யாரும் எதிர்பாராதது.
தான் சார்ந்த நிறுவனங்களை எல்லாம் எதிர்த்து, நிகழப்போகும் பொருளாதார வீழ்ச்சிக்கான சான்றுகள் அனைத்தையும் முன் அனுமானித்து முதலீடு செய்வார்கள். ஆனால் அவர்கள் அனுமானித்த நேரத்தில் பொருளாதாரம் வீழாது. வீழவில்லை என சொல்லப்படும். அவர்கள் சார்ந்திருக்கும் நிறுவனங்கள் அவர்களின் முதலீடுகளால், நஷ்டங்களை சந்தித்திருக்கும். ஆகவே அவர்களை கை கழுவும் நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்படுகின்றன. கதை மாந்தர்களுக்கு தங்களின் வேலைகள் போவது கூட பொருட்டாக இருக்காது.
ஆனால் நிச்சயமாக அதல பாதாளத்தில் விழுந்து விட்ட பொருளாதாரத்தை பொய் சொல்லி பொய் சொல்லி அமெரிக்க அரசும் ஊடகங்களும் கட்டி காத்து வருவதை பார்த்து பொருமுவார்கள். எல்லாமே சரியாக இருப்பதாக நினைத்து வாழ்ந்து வரும் மக்களின் மேல் எத்தனை பெரிய தாக்குதல் பொருளாதார ரீதியாக நடத்தப்படவிருக்கிறது என்பதை முன்னமே அவர்கள் திட்டவட்டமாக பார்க்கவும் முடிந்து அதற்காக ஒன்றும் செய்ய முடியவில்லை என உழலும் மனநிலையை சரியாக பிரதிபலித்திருப்பார்கள். அரசும் முதலாளிகளும் பச்சையாக ஒரு பொய்யை பெரிதாக பெரிதாக ஊதிக் கொண்டே இருப்பார்கள்.
உலக நாட்டு அரசுகளின் - குறிப்பாக முதலாளித்துவ அரசுகளின் - பொருளாதாரங்கள் யாவும் சந்தையை சார்ந்தே இயங்குகின்றன. சந்தையில் ஊதி பெருக்கப்படும் ஊகக் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டே அந்த நாட்டுப் பொருளாதாரங்கள் இயங்குகின்றன. அதனாலேயே அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைகள் எந்த நேரத்திலும் சரியலாம் என்கிற நிலையில் ஊசலாடுகின்றன. இந்தியாவின் நிலையும் இதுதான்.
The Big Short திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இருக்கிறது. நம் எதிர்காலம் தெரிந்து கொள்ள விரும்புவோர் படத்தைப் பார்க்கலாம்.