தமிழில் 'மைனா' படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபல நடிகையாக இருப்பவர் அமலாபால். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடா உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹிந்தி மொழியில் ஒரு ஓடிடி தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் 'பொன்னியின் செல்வன்' வரும் 30-ம் தேதி பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகை அமலாபால் இயக்குனர் மணி ரத்னம் தன்னை 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க அணுகியதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, "சில வருடங்களுக்கு முன் 'பொன்னியின் செல்வன்' படத்துக்காக மணிரத்னம் என்னை அழைத்தார். நான் அவர் ரசிகை என்பதால் அவர் என்னை அணுகியபோது சந்தோசமாக ஆடிஷனில் கலந்துகொண்டேன்.
ஆனால், அப்போது அந்தப் படம் தொடங்கவில்லை. இதனால் நான் மிகவும் வருத்தமும், கவலையும் அடைந்தேன். அதன் பின்னர் 2021-ம் ஆண்டு அதே படத்துக்காக அவர் என்னை அழைத்தார். ஆனால் அப்போது எனக்கு நடிக்கும் மனநிலை இல்லை. அதனால் மறுக்க வேண்டியதாகிவிட்டது. இதற்காக வருந்துகிறேனா? என்றால் கண்டிப்பாக நான் வருத்தப்படவில்லை. ஏனென்றால் இப்போது இந்த விஷயம் மிகச்சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் நான் அதிகம் நடிக்காததற்கு காரணம், அங்கு கமர்சியல் படங்களே அதிகமாக இருக்கிறது. மேலும் எல்லா படங்களிலும் 2 நாயகிகள் இருப்பார்கள். காதல் காட்சிகள், பாடல்கள் எல்லாமே கவர்ச்சியாகவே இருக்கும். அதனால் அங்கு குறைவான படங்களிலேயே நடித்தேன்" என்றார்.