தமிழ்நாடு அரசு சார்பில் திரை கலைஞர்களை ஊக்குவிக்கும்விதமாக திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அ.தி.மு.க ஆட்சியில் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அறிவிப்போடு நின்றுவிட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சிகள் எதும் நடைபெறவில்லை. இந்நிலையில் செப்டம்பர் 4ம் தேதி 2009 - 2014 தமிழ்நாடு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலைலையில், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான பரக்கத் அலி சமூக வலைதளத்தில் எழுதிய பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவு பின்வருமாறு:-
தமிழக அரசின் சினிமா விருது அறிவிக்கவே 6 வருஷங்கள் ஆகின. அப்படி அறிவித்த விருதையும் கொடுக்கவே 5 வருஷம் ஆகியிருக்கு. எடப்பாடி ஆட்சியில் கொடுக்காமல் நிறுத்து வைக்கப்பட்டிருந்த சினிமா விருதுகளை செப்டம்பர் 4-ம் தேதி வழங்குகிறது தி.மு.க அரசு.
தரமான திரைப்படங்களை ஊக்கப்படுத்த ஆண்டுதோறும் சிறந்த படங்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கப்படும். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் இந்த விருதுகள் கிடப்பில் போடப்பட்டன. ஒரு வழியாக, 2009 முதல் 2014 வரை ஆறு ஆண்டுகளுக்கான சினிமா விருதுகளை, 2017 ஜூலை 13-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ‘முதல்வரான பிறகு 4,903 கோப்புகளில் கையெழுத்திட்டார்’ என எடப்பாடி பழனிசாமிக்கு வெண்சாமரம் வீசியவர்கல், இந்த விருதுக் கோப்பையையும் பட்டியலில் சேர்த்தார்களா எனத் தெரியவில்லை.
விருது அறிவிப்புத் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், ‘முதல்வர் தலைமையில் விரைவில் நடைபெறவிருக்கும் விழாவில், இந்த விருதுகள் அனைத்தும் வழங்கப்பட உள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பழனிசாமி அரசு ‘விரைவாக’ செயல்படுவதற்கு இந்தச் சினிமா விருதுகள் அறிவிப்பு ஒன்றே போதும். ‘பசங்க’ படத்துக்கு 2009-ம் ஆண்டின் சிறந்த படம் என விருது அறிவித்தார்கள். அந்தப் படத்தில் சிறுவர்களாக நடித்த ஸ்ரீராம், கிஷோர் ஆகியோர் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டார்கள். இப்போது அவர்கள் வளர்ந்து ஹீரோவாகவே ஆகிவிட்டார்கள். சின்ன குழந்தையாக இருக்கும் போது விருது அறிவிக்கப்பட்டவர்கள், இப்போது இளைஞர்களாக வந்து விருதை வாங்க போகும் கொடுமை தமிழகத்தில் மட்டுமே நடக்கும்.
சின்னத்திரை விருதுகளும் அதோகதிதான். நெடுந் தொடர்கள், குறுந் தொடர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு 2009 முதல் முதல் 2013 வரை வழங்குவதற்கான அறிவிப்பும் சினிமா விருது அறிவிப்புடன்தான் சேர்த்து வெளியிடப்பட்டது.
சினிமா விருதுகளுடன் அண்ணா, என்.எஸ்.கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர், ராஜா சாண்டோ, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், கண்ணதாசன், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களில் ‘கலைத்துறை வித்தகர் விருது’களும் வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதுகளையும் கொடுக்காமல் வைத்திருந்தார்கள்.
விருதுகளைப் பெறுகிறவர்களுக்குச் செய்யப்படும் மரியாதை அல்ல இது. அ.தி.மு.க ஆட்சியின் காரண கர்த்தாக்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களில் உள்ள விருதுகளுக்கும் பழனிசாமி அரசு அவமரியாதை செய்தது.
சிறிய முதலீட்டில் தயாரித்து வெளியிடப்படும் தரமான திரைப்படங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏழு லட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்கும் திட்டம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சினிமா விருதுகள் போலவே இந்த மானியமும் பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. ‘2007 முதல் 2014-ம் ஆண்டு வரையில் வெளியான தரமான 149 படங்களுக்கு தலா ஏழு லட்சம் ரூபாய் வீதம் 10.43 கோடி ரூபாய் வழங்கப்படும்’ என்ற அறிவிப்பு 2018 ஜனவரி 2-ம் தேதி வெளியிடப்பட்டது.
சிறந்த படங்களுக்கு முதல் பரிசு 2 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு ஒரு லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசு 75 ஆயிரம் ரூபாய். அதோடு நினைவுப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா ஐந்து பவுன் தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும். இதற்கான செலவுகள் குறைவு. ஆனால், மானியப் படங்களுக்குச் செலவு அதிகம். செலவு குறைவான சினிமா விருதுகளை முதலில் அளிக்காமல், அதிகச் செலவு பிடிக்கும், மானியத் தொகையை வழங்குவதில் அதிமுக அரசு அவசரம் காட்டியது. படங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏழு லட்சம் ரூபாய் மானியம் தரப்படுகிறது. மானியம் பெறும் படங்களை எடுத்த தயாரிப்பாளர்கள் அதிமுக அரசு தரப்பைக் ‘கவனித்ததுமே’ அவர்களுக்கு செக் வழங்கப்பட்டன.