இருளர் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்க்கை, ராஜாக்கண்ணு என்பவருக்கு போலிஸாரால் நேர்ந்த உண்மையான கொடுமைகள் குறித்தும், அவரது மனைவிக்காக முன்னாள் நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிக் கண்டது குறித்தும் பேசியிருக்கும் படம் ‘ஜெய் பீம்’.
டி.ஜெ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படம் வெளியான பிறகு விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்ததோடு "இந்த படம் எனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது" என்றும் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் அனைத்து மக்களிடமும் வரவேற்பை பெற்ற இப்படம் கடந்த ஆண்டு ஆஸ்கர் பட்டியலிலும் இடம்பெற்றது. மேலும் ஆஸ்கரின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்திலும் இப்படத்தின் ஒரு பகுதி திரையிடப்பட்டது.
இந்த நிலையில், தற்பட்டது சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் 'சர்வதேச திரைப்படவிழா' ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது '12-வது பெய்ஜிங் சர்வதேச திரைப்படவிழா' நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழ் படமான 'ஜெய் பீம்' திரையிடப்பட்டது. அந்த நாட்டு மொழியில் திரையிடப்பட்ட இப்படத்தை சீன திரை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
சீன திரை ரசிகர்கள் இப்படத்தை காணும்போதே தேம்பி அழுதனர். மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த சீனர்கள் இப்படத்தில் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் 'சத்துரு, செங்கேணி' என்று தெரிவித்தனர். அதோடு இப்படத்தின் கதை மன வலியை ஏற்படுத்துவதாகவும், சமூகத்தில் நடக்கும் இன்னல்களை எடுத்துரைப்பதாகவும், கண்ணீருடன் பார்த்து மனம் நெகிழ்ந்து போனதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இது போன்ற சமூக கருத்துக்கள் எடுத்துரைக்கும் தமிழ் படங்களை அதிகம் காண விரும்புவதாகவும் ஆர்வம் தெரிவித்தனர். இது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தமிழ் படமான 'ஜெய் பீம்' படத்திற்கு இன்னும் வரவேற்பு கிடைத்து வருவதை கண்டு ரசிகர்கள் ஆனந்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.