நடிகர் பார்த்திபன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில், அவரது நடிப்பில் அண்மையில் வெளியான படம் தான் 'இரவின் நிழல்'. இது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்றும் வரும் இந்த படம் தமிழ் சினிமாவின் முதல் 'நான் லீனியர்' (non-linear) திரைப்படமாகும். அதாவது இவையனைத்தும் ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட படம்.
ஒரே சிங்கிள் ஷாட்டில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், பிரிகிடா, ரேகா நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு பார்த்திபன் நடிப்பில் வெளியான 'ஒத்த செருப்பு' திரைப்படத்தில் தனி ஒருவராக நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
அதே போல், தற்போது 'இரவின் நிழல்' படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்து, எந்த வீடியோவில் எந்த எடிட்டிங்-ம் செய்யாமல் திரையரங்கில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை பார்த்த அனைத்து திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, இந்த படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'இரவின் நிழல்' படத்தை பார்த்து நடிகர் பார்த்திபனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதாவது இந்த படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் பார்த்திபனுடன் அமர்ந்து பார்த்துள்ளார். இதையடுத்து படம் முடிந்த பின்னர், ஒரே சிங்கிள் ஷாட்டில் இந்த படம் எடுக்கப்பட்டிருப்பதை கண்டு வியந்து பார்த்திபனை புகழ்ந்தார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதலைமச்சர் வெளியிட்ட பதிவில், "எதிலும் தனிப்பாணி - அதுதான் பார்த்திபன்..! ஒத்த செருப்புக்குப் பிறகு ஒத்த ஷாட் படம்..! இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்..! Nonlinear single shot படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்..! ' என்று குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.