'அன்பே சிவம்' மிகவும் பிடித்தமான படம். அப்படத்தின் டெலீடட் சீன் ஒன்றை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. கமலும் நாயகி கிரணும் வெளியூர் சென்று பதிவுத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுப்பார்கள். இயக்கத் தோழர்கள் கமலுக்கு உதவுவார்கள். கிளம்புவதற்காக இருப்பிடத்துக்கு வந்து தன் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருப்பார் கமல். உடன் உமா ரியாஸ்ஸும் உதவிக் கொண்டிருப்பார். திடுமென உமா ரியாஸ், "நாங்கல்லாம் உங்க கண்ல படவே மாட்டோம்ல. வெளியே இருந்து யாராவது வந்தாதான் உங்க கண்ணுக்கு தெரியுமில்ல?" என ஆரம்பிப்பார்.
கமலுக்கு முதலில் புரியாது. உமா ரியாஸ்ஸும் கமலை காதலித்திருப்பார். கிரணின் வீட்டு விருந்துக்கு கமல் சென்று கிரணை சந்திக்கும் முதல் சந்திப்பிலிருந்தே உமா ரியாஸ்ஸும் கமலுடன்தான் இருப்பார். கிரண் மற்றும் கமல் இருவருக்குமான காதல் காலத்திலும் கூட இயக்கத் தோழராக உமா ரியாஸ் கூடவேதான் பயணித்திருப்பார். இருவரின் காதலும் அவருக்கு தெரிந்துதான் இருக்கும். ஆனால் எங்கும் சிறு முகச்சுளிவு கூட காட்டியிருக்க மாட்டார். இறுதியாக அந்த டெலீடட் சீன் வருவதற்கு முந்தைய காட்சியில் கமல் கிரணிடம் 'வர்க்க ரீதியாக நமக்குள் செட் ஆகாது' என சொல்லிப் பிரிவை கூறியதும் கிரண் கலங்குவார்.
அப்போது அங்கு வரும் தோழர்கள் கமலின் முடிவுக்காக அவரை கடிந்து கொள்வார்கள். உமா ரியாஸ் மட்டும் தன் பல நாள் ஆதங்கத்தை மறைக்க முடியாத ஆனந்தத்துடன் இருவரின் பிரிவையும் ஆதரிக்கும் வகையில் பேசுவார். ஆனால் பிற தோழர்கள் கமல், கிரண் மணம் முடிப்பதை பற்றி பேசுவார்கள். அவர்களும் அதை ஆமோதிக்கும் வகையில் அணைத்துக் கொள்வார்கள். உமா ரியாஸ்ஸின் பல நாள் எதிர்பார்ப்பு நொறுங்கி வீழும். இருவரையும் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார். வழக்கமான சினிமாவில் அங்கு உமா ரியாஸ் கதாபாத்திரம் கொள்ளும் வகையிலான துயரம் காவியமாக்கப்படும். அல்லது பொறாமை ஆக்கப்பட்டு ஒரு கோபம், வெறி, பழிவாங்கல் முதலிய பல விஷயங்களாகக் கூட மாற்றப்பட்டிருக்கலாம் 'படையப்பா' நீலாம்பரி போல்.
ஆனால் அவை எதுவுமின்றி ஒரு பக்குவநிலையில் அடுத்த காட்சி அரங்கேறும். உமா ரியாஸ் தன்னுடைய காதலை கோபம், இயலாமை, ஆற்றாமை, இழப்பு போன்ற பல உணர்வுகள் கலந்து ஓர் ஒருதலைக் காதலின் சாமானிய வார்த்தைகளில் புலம்பி தீர்ப்பார். அவரின் காதலை ஒரு வழியாக புரிந்து கொள்ளும் கமல் ஆறுதல் சொல்ல முயலுகையில் உமா ரியாஸ் அழகாய் அதை புறக்கணிப்பார்.
காதலை காவியத்தன்மை இன்றி யதார்த்தமாக புரிந்து கொண்டு பிரிவை கூட இயல்பாக கடந்து போவது முக்கியமென அடுத்த வசனங்களில் உமா ரியாஸ்ஸின் கதாபாத்திரம் வெளிப்படுத்தியிருக்கும். "என்கிட்ட லவ் சொல்லி மூணு வருஷமா காத்திருந்த நம்ம ட்ரூப் வெங்கடேஷ்ஷ கூட உங்களால நான் புறக்கணிச்சேன். நான் அவனையே லவ் பண்ண போறேன். ஒரே ஒரு ஹெல்ப். நான் உங்கக்கிட்ட சொன்ன எதுவும் வெங்கடேஷுக்கு தெரிய வேண்டாம். ஏன்னா அது அவர் வாழ்க்கை முழுக்க உறுத்திக்கிட்டே இருக்கும்" எனப் பேசி விட்டு அங்கிருந்து சென்றுவிடுவார்.
காதலன் தனக்கு காதலனாகும் வாய்ப்பு இனி இல்லை என்கிற கட்டத்தில்தான் இந்த வெடிப்பு. ஏதோவொரு நம்பிக்கை இழுத்துச் செல்லும் தேராக மனக் கோட்டைக்குள் காதல் உலவுகையில் திடீரென தேர் மட்டுமின்றி அந்தக் கோட்டையே இடிந்து விழுகையில் என்னதான் செய்ய முடியும்? நம்மை உயிர்த்து வைக்கும் சிறு ஆதாரத்தை தேடிச் செல்ல வேண்டும், அவ்வளவுதான். உமா ரியாஸ் வெளியேறி கொண்டிருக்கும்போதே ஒரு சின்ன சந்துக்குள் ஒளிந்து கேட்டுக் கொண்டிருக்கும் 'பவுன்' என்ற கதாபாத்திரம் வெளியே வரும்.
உமா ரியாஸ் சென்ற திசையை பார்த்தபடியே வரும் பவுன் கமல் அருகே வந்து நின்று கண் கலங்குவார். கமல் 'என்னாச்சு' என்றதும் கண் கலக்கத்தோடு தலையில் கை வைப்பார் பவுன். உடனே கமல், 'தலைவலியா' எனக் கேட்க, மீண்டும் உமா சென்ற திசையை பார்த்து தன் வயிற்றில் கை வைப்பார் பவுன். கமல் 'வயிற்று வலியா' என்பார். அவரை திரும்பிப் பார்த்து பவுன் "ஏன் சகா எனக்கெல்லாம் காதல் வரக் கூடாதா?" எனச் சொல்லி தன் துணிகளையும் எடுத்து பையில் வைப்பார்.
மீண்டும் ஒரு தேர். மீண்டும் ஒரு மனக்கோட்டை! உமா ரியாஸ்ஸை ஒரு தலையாய் பவுன் காதலித்திருக்கும் விஷயம் அப்போதுதான் கமலுக்கு தெரிய வரும். வெங்கடேஷ்ஷுடன் உமா கதாபாத்திரம் பழகுவதை காண முடியாது என சொல்லி கமலுடன் அவரின் திருமணத்துக்காக கிளம்புவார் பவுன். கமலும் பவுனும் செல்லும் பேருந்துதான், ஒரு மலைப்பாதையில் ஒரு நாய் குறுக்கே வருவதில் கட்டுப்பாட்டை இழந்து மலையிலிருந்து விழுந்து விபத்துக்குள்ளாகும். பவுன் அதில் இறப்பார். கமல் மரணத்துக்கு அருகே சென்று மீள்வார். கிரணை காதலித்த கமலும் காதலை இழப்பார். உமா ரியாஸ்ஸும் அவர் காதலை இழந்திருப்பார். பவுன் காதலையும் இழந்து உயிரையும் இழந்திருப்பார். இறுதியில் அனைவரின் வாழ்க்கைகள் கமலின் முகம் போன்ற கோணலான புன்னகைகளிலேயே அழகு கொள்ளும். தேங்குதலல்ல, ஓடிச் சென்று காயம் கடத்துதலே காதல்!