ப்ளட் டைமண்ட், பாடி ஆஃப் லைஸ், ஏவியேட்டர் எனப் பல படங்களி விருது பெறத்தக்க நடிப்பை டிகாப்ரியோ வழங்கியிருந்தபோதும் ஆஸ்கர் அவருக்கு வழங்கப்படவில்லை. எனவே ஆஸ்கரை குறி வைத்து டிகாப்ரியோ நடித்த படமாக The Revenant கருதப்படுகிறது. உயரமானப் பனிமலைகள், காட்டாற்றில் நீச்சல், கரடித் தோல் ஆடை என கடுமையாக டிகாப்ரியோ அப்படத்துக்காக உழைத்திருந்தார் என்ற போதிலும் ரெவனெண்ட் படத்தில் டிகாப்ரியோவின் நடிப்பை விட சிறப்பாக வேறேதும் இல்லையா? இருக்கிறது. நிறையவே இருக்கிறது.
இயற்கை பெருவெளிக்கு முன் மரணத்தையும் வாழ்வையும் காட்சிகளால் விவாதிப்பதை போல் அலாதி ஏதுமில்லை. உயிர்ப்பின்மீது மனிதனுக்கு இருக்கும் மூர்க்கத்தனமான பற்று, மரணத்திலிருந்து மீண்டெழுந்ததும் மிக சாதாரணமான மனிதனாகி, பழி வாங்க அலைந்து, கடைசியில் கொல்லப்படும் சூழலுக்கு வில்லனை கொண்டு சென்றுவிட்டு “பழி வாங்கல் மனிதனுக்கானது அல்ல; கடவுளுக்கானது” என வழக்கமான ‘குற்றவுணர்ச்சியிலிருந்து-தப்பிக்க-விரும்பும்-மனிதனின் மத பம்மாத்துகளை’ சொல்லி முடிகிறப் படம்தான் ரெவெனெண்ட்.
கண்டிப்பாக ஹாலிவுட்டுக்கு (குறைந்தபட்சம் சமகாலத்தில்) Revenant கொடுக்கும் அனுபவம் மிகப் புதியதே! திரை நிகழ்வு என்பதையும் கடந்து திரை அனுபவம் என சொல்லக்கூடிய தருணங்கள் பலவற்றை படம் கொடுக்கிறது.
வியப்பிலாழ்த்துவது இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் மட்டும்தான். என்ன மாதிரியான லொகேஷன்கள்! எங்கிருந்து அவற்றைப் பிடித்தார்கள்?
பார்ப்பவற்றை அப்படியே அல்லது அதைவிட சிறப்பாக திரையில் கொண்டு வருவது சாதாரண விஷயம் அல்ல. அதிலும் வெளிப்புறத்தில், குறைவான ஒளி கொண்டு, சில மணி நேரங்களே பதிவு செய்ய முடியும் என்ற சிக்கல்களை எல்லாம் வைத்துக்கொண்டு!
இமானுவெலின் ஒளிப்பதிவு திறமைக்கு ஏற்கனவே சிறந்த சான்று இருக்கிறது. கிராவிட்டி படத்தில் திரையரங்கையே விண்வெளியில் சுழல விட்டவர் அவர். இப்படியெல்லாம் டீம் அமைவது கொடுப்பினைதான்.
அலெஹாந்திரோவின் பேபெல் படத்தை பார்த்து இவர்தான் இயக்குநர் என தெரியாமல் வியந்திருக்கிறேன். பேர்ட் மேன் படத்தை ‘இவர்தானா இயக்குநர்’ என தெரிந்து வியந்திருக்கிறேன். பிறகு ரெவெனன்ட்! இயற்கையையும் மனிதனின் மிருகத்தையும் ஒன்று சேரப் பொருத்தி பார்க்கும் சிந்தனையே அவரின் சிந்தனாவெளிப்பரப்புக்கு சாட்சி. திரைமொழியும் அழகியலும் சரியான விகிதத்தில் அமைந்திருக்கிறது மனிதருக்கு.
படத்தில் ஒரே ஒரு வருத்தம்தான். இயற்கை என்னும் பேராண்மையின் முன் நடக்கும் சிறிய மனிதர்களின் ஆட்டம், வழக்கமான பழியுணர்ச்சி, கொலைகள் போன்றவற்றால் அல்லாமல் அன்பு, மன்னிப்பு, தியாகம் போன்ற பெருங்குணங்களால் நிரப்பப்பட்டிருந்தால் இன்னும் அற்புதமாக இருந்திருக்கும்.
ஒரு காட்சியில் டிகாப்ரியோவால் தன் குட்டிகளுக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என பயந்து அவர் மீது ஒரு கரடி பாய்கிறது. அடிக்கிறது. குதறுகிறது. கொல்ல முயல்கிறது. மிருக வாழ்க்கையில் எதிர் மிருகத்தின் இல்லாமை மட்டும்தான் பாதுகாப்பு. மனித வாழ்க்கை அப்படியில்லையே! மனிதன் வாழ்வது சமூக வாழ்க்கை அல்லவா? அப்படியிருக்க, தன் மகன் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திய வில்லனை கரடி போலவே அடித்து, துவைத்து, துவம்சம் செய்து கொன்றொழிப்பதில் என்ன மனிதம் இருக்கிறது?
படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.