சமீபத்தில் நடந்த ஒரு கொண்டாட்டத்தின்போது TTF வாசன் என்கிற பெயர் நமக்கு அறிமுகமானது. பைக்கராக இருந்து யூ ட்யூப் சேனல் நடத்தும் ஒருவரைச் சந்திக்கவா ஆயிரக்கணக்கான பேர் திரண்டனர்? என அதிர்ச்சி அடைந்தோம். நம் சமூகத்துக்குள் ஊடுருவி இருக்கும் சமூகதள, தொழில்நுட்ப வாழ்க்கையின் அளவு பிரமிக்கத்தக்கதாக இருந்தது. அச்சத்தைத் தருவதாகவும் இருந்தது. அச்சமயத்தில்தான் சமூகதளங்கள் இளைஞர்கள் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த விவாதம் ஒன்றில் Escaype Live என்கிற பெயரும் தட்டுப்பட்டது.
Escaype Live ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான ஒரு தொடர். முழுமையாக அத்தொடரைப் பார்க்கும் எவருக்கும் தொழில்நுட்பச் சூழல் குறித்த அச்சம் உருவாகாமல் இருக்க முடியாது. கதைப்படி சீனாவின் சமூகதளச் செயலிதான் Escaype Live. இந்தியாவில் அது அறிமுகமாகிறது. எல்லாரும் அத்தளத்தில் கணக்கு தொடங்கி காணொளிகளை பதிவேற்றலாம். ஒவ்வொரு காணொளிக்கும் பின்னூட்டங்கள் இடப்படும். வைரங்கள் (லைக்குகள் போல) இடப்படும். வைரங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் காணொளி பிரபலமடையும்.
இத்தகைய சமூகதளம் இந்தியாவுக்குள் அறிமுகமாகும்போது என்ன நேர்கிறது என்பதையே தொடர் பேசுகிறது. இந்தியச் சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் மக்களின் மனநிலைகளில் சமூகமயமாக்கப்படும் தொழில்நுட்பமும் சமூகதளமும் என்னவித வினையாற்றும் என்பதை நாம் யோசிக்கவில்லை. யோசிப்பதுமில்லை. எஸ்கேப் லைவ் யோசித்திருக்கிறது. திடுமென செயற்கையாகக் கிடைக்கும் புகழ் வெளிச்சம் மன பாதிப்பு கொண்ட ஒருவனையும் வறுமைக்குப் பிறந்த ஒருவனையும் அப்பாவி சிறுமியையும் வருமானம் ஈட்ட முடியாத ஒரு வட கிழக்குப் பெண்ணையும் பெண் தன்மை கொண்டிருக்கும் ஆணையும் என்ன செய்யும் என்பதுதான் எஸ்கேப் லைவ் இணையத் தொடர் இயங்கும் களம்.
மேற்குறிப்பிட்ட கதாபாத்திரங்களின் புகழ் வெளிச்சத்தை இயக்கும் வழியில் அவர்களின் வாய்ப்பை முடக்கி சிந்தனையை வடிவமைக்கிறது சமூகதளச் செயலி நிறுவனம். அதை நேரே பார்க்கும் வாய்ப்பு கிருஷ்ணா ரங்கசாமி பாத்திரத்துக்கு நேர்கிறது. அந்தப் பாத்திரம் அந்த நிறுவனத்தில் பணிபுரிகிறது. சற்று பிற்போக்குத்தனம் நிறைந்த கலாச்சாரக் காவலருக்கான தோற்றம் கொடுக்கும் அப்பாத்திரம்தான் அந்த நிறுவனத்தின் சுரண்டலை எதிர்க்கிறது நமக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. நாம் இச்சமூகத்தின் எந்த சக்தியின் விளைவாக இயங்குகிறோம் என்கிற கேள்வியும் எழுகிறது.
ஏற்கனவே இச்சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கம், சாதிய ஒடுக்குமுறை, வர்க்கப் பாகுபாடு, உழைப்புச் சுரண்டல் முதலிய கொடுமைகளை சமூகதள தொழில்நுட்பம் குறைத்திருக்கிறதா அதிகப்படுத்தி இருக்கிறதா எனப் பார்த்தால் ஏமாற்றம் கொடுக்கும் பதிலே மிஞ்சுகிறது. கொடுமைகளை அதிகரித்திருப்பதோடு சமூகதள தாக்கம் நின்றுவிடாமல், நம் இளையோர் மனங்களில் பெரும் மாற்றங்களை வேறு உருவாக்கி இருக்கிறது.
தன்னை முன்னிலைப்படுத்தும் வாழ்க்கை, புகழை மட்டுமே அடையாளமாக கொள்ள விரும்பும் சிந்தனை, லைக்குகள் குறைந்தாலும் நொறுங்கும் மனம், அருகே இருக்கும் உறவுகளை புறக்கணித்து கண்ணுக்கு தெரியாத கூட்டத்தை கொண்டாடும் மனநிலை என ஆபத்துகளை அறிவித்துக் கொண்டே இருக்கிறது சமூகதளச் செயல்பாடு. ஒரு பானைச் சோற்றின் ஒரு சோறுப் பதம்தான் எஸ்கேப் லைவ் தொடர்!