சினிமா

‘‘பறவையே எங்கு இருக்கிறாய்.. ஒரு சகாப்த கலைஞர் நா.முத்துக்குமார்” : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

நா.மு எழுதிய ஒவ்வொரு பாடலும் அத்துனை தனித்துவமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்றே கூறலாம்.

‘‘பறவையே எங்கு இருக்கிறாய்.. ஒரு சகாப்த கலைஞர் நா.முத்துக்குமார்” : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘‘நா.முத்துக்குமார், ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தமிழ்ச் சமூகத்தைத் தன் பாடல்களால் ஆக்கிரமித்தவன். அவனுடைய ‘ஆனந்த யாழ்' மீட்டப்படாத வீடில்லை. அவனுடைய காதல் வரிகளைப் பயன்படுத்தாத காதலர்கள் மிகக் குறைவு. சொல்லப்போனால், தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப அட்டையில் பதியப்படாத உறுப்பினன் அவன். அவனைப் பற்றி அவனுடைய வரிகளில் சொல்ல வேண்டுமென்றால், அவன் பேரன்பின் ஆதி ஊற்று. முத்து இருப்பான்... அவனுடைய பாடல்கள் ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு நொடியிலும் அவன் வாழ்ந்து கொண்டிருப்பான்."

இது இயக்குனர் ராமின் வார்த்தைகள்

நா. மு....

கன்னிகாபுரத்து கவிஞன்

வாசிப்புக் காதலன்.

புத்தகப் பிரியன்

பயணப் பித்தன்

பூமாலையாய் பா மாலை செய்பவன்

பாடலால் பலரையும் காதலிக்க வைத்தவன்

உவமைகளை விதவிதமான வடிவில் வகுத்து தொகுத்தவன்

இசைக்கு எழுத்துக்களை இசைய வைத்தவன்.

1975ம் ஆண்டு தமிழாசிரியரின் மகனாகப் பிறந்தவர். தன்னுடைய 4வது வயதில் தாயை இழந்த இவர் சிறு வயது முதலே கவிதை எழுதுவதும், புத்தகம் வாசிப்பதும் பொழுதுபோக்காகக் கொண்டவர். 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் பாடலாசிரியர் என்றால் கண்டிப்பாக அது நா. முத்துக்குமார் தான். ரேடியோவில் அவருடைய பாடல்களை கேட்டபடி அவரின் வரிகளை முனுமுனுத்தபடி வளர்ந்தவர்கள் ஏராளமானோர்.

அலப்பரியா படைப்பாளி... நவீன இலக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர்

‘‘பறவையே எங்கு இருக்கிறாய்.. ஒரு சகாப்த கலைஞர் நா.முத்துக்குமார்” : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

மாடி வீட்டு முட்டாள்

மழை வரும்போது

குடையை ஏன்

திருப்பிப் போட்டிருக்கிறான்?" என்று டிஷ் ஆன்டனாக்கள் பற்றி நகைச்சுவையாக கவிதை எழுதியது போலவே

"ஒவ்வோர் அடகுக்கடை கம்மல்களிலும்

உலர்ந்துகொண்டிருக்கிறது

ப்ரியமில்லாமல் கழட்டிக்கொடுத்த

ஒரு பெண்ணின் கண்ணீர்த் துளி" என்று வாழ்வியலின் வலிகளுக்கும் மையிட்டு உயிர்கொடுத்தவர். தூர் என்னை கவிதை மூலம் தன்னை தமிழ் உலகுக்கு பிரபலப்படுத்திக் கொண்டவர்.

வேப்பம் பூ மிதக்கும்

எங்கள் வீட்டு கிணற்றில்

தூர் வாரும் உற்சவம்

வருடத்துக்கு ஒரு முறை

விஷேசமாக நடக்கும்.

ஆழ் நீருக்குள்

அப்பா முங்க முங்க

அதிசயங்கள் மேலே வரும்...

கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,

துருப்பிடித்த கட்டையோடு

உள் விழுந்த ராட்டினம்,

வேலைக்காரி திருடியதாய்

சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...

எடுப்போம் நிறையவே!

சேறுடா சேறுடா’ வென

அம்மா அதட்டுவாள்

என்றாலும்

சந்தோஷம் கலைக்க

யாருக்கு மனம் வரும்?

படை வென்ற வீரனாய்

தலைநீர் சொட்டச் சொட்ட

அப்பா மேலே வருவார்.

இன்று வரை அம்மா

கதவுக்குப் பின்னிருந்துதான்

அப்பாவோடு பேசுகிறாள்.

கடைசி வரை அப்பாவும்

மறந்தே போனார்

மனசுக்குள் தூர் எடுக்க..!”

என்பதுதான் அக்கவிதை

‘‘பறவையே எங்கு இருக்கிறாய்.. ஒரு சகாப்த கலைஞர் நா.முத்துக்குமார்” : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

அம்மாவின் துயரம் மட்டுமின்றி தம்பி, தங்கை, காதலி, நண்பன், என அத்தனை உறவுக்கும் கடித வடிவில் கவிதை எழுதியவர். அணிலாடும் முன்றில் புத்தகத்தில் அவர் மகனுக்கு ஒரு கவிதை எழுதியிருப்பார். எந்தத் தந்தையும் அப்படி ஒரு கடிதத்தை மகனுக்கு எழுதி இருக்க வாய்ப்பில்லை என்பதில் சந்தேகமே இல்லாத அளவிற்கு அன்பும் அறிவுரையும் அக்கரையும் கலந்து இருக்கும். நியூட்டனின் மூன்றாம் விதி, கிராமம் நகரம் மாநகரம், பட்டாம்பூச்சி விற்பவன், ஆணா ஆவண்ணா, என்னை சந்திக்க கனவில் வராதே, சில்க் சிட்டி, பால கண்டம், குழந்தைகள் நிறைந்த வீடு, வேடிக்கை பார்ப்பவன் முதலிய படைப்புகளை படைத்துள்ளார்.

புகைவண்டி ராட்சச உலோகப் பாம்பாகவும் வாழ்க்கையை ஒரு கொலாஜ் ஓவியமாகவும் உருவகப்படுத்திப் பார்ப்பவர்.வாழ்வின் ஒவ்வொரு சூழலையும் ஒவ்வொரு உறவையும் அவ்வளவு நேசித்துக் கவிதை வார்கக்கூடியவர்.

இயக்குனராக வேண்டும் என்ற முனைப்பில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றினார். அதன் பிறகு சீமான் இயக்கத்தில் வெளிவந்த வீரநடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

கல்லுக்குள் சிற்பம் உறங்குவது போல சொல்லுக்குள் இசை எனும் சிற்பம் உறங்கிக் கொண்டிருக்கிறது என்பார்.

அப்படி சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகையும் அழகாய் இசையில் சேர்த்தவர். இப்பாடலுக்காக தேசிய விருதையும் பெற்றார்.

‘‘பறவையே எங்கு இருக்கிறாய்.. ஒரு சகாப்த கலைஞர் நா.முத்துக்குமார்” : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

‘இவைதான் நா.மு. வின் சிறந்த பாடல்கள் என தனித்து ஒன்றையும் கூறிவிட முடியாது. அவர் எழுதிய ஒவ்வொரு பாடலும் அத்துனை தனித்துவமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்றே கூறலாம்.

சீமானின் ‘வீரநடை’ படத்தில் ‘முத்துமுத்தாய்ப் பூத்திருக்கும் முல்லைப் பூவைப் புடிச்சிருக்கு...’ என்று தன் பெயருடனேயே திரைதுறையில் தன் பயணத்தைத் தொடங்கியிருப்பார். இன்று வரை தமிழ்த் திரைப் பாடல்களில் அதிக உவமை, உருவகங்கள் கொண்ட பாடல் அதுதான் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்தப் படம் வெளிவருவதற்குள் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு பாடல் எழுதவைத்தார் இசையமைப்பாளர் தேவா. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் அதிக பாடல்களை படைத்துள்ளார்.

கண்மூடித் திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல

அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே.. குடை இல்லா நேரம் பார்த்து கொட்டி போகும் மழையை போல

அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாலே.. என்று ரசிகர்களைக் காதல் மழையில் நனைய வைத்தவர்

‘கல்லறை மேலே பூக்கும் பூக்கள்... கூந்தலைப் போய்தான் சேராதே...', என்னும் வரிகளில் கல்லறையில் பூக்கும் பூக்களுக்கு பலனில்லை என்று எழுதியிருப்பார். அதே கல்லறைப் பூக்களை கெளரவிக்கும் வகையில் கல்லறை மீதுதான் பூக்கும் பூக்கள் என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா என்றும் எழுதியிருப்பார்.

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி போன்ற பாடல் மூலம் 90ஸ் கிட்களின் சிறு வயது விளையாட்டுக்களை பட்டியலிட்டு கருவேலங்காட்டுக்குள் சோலக்கருதுகளை சுட்டுத் தின்ற பால்ய கால பருவத்தை நினைவுகூற வைத்தவர்.

கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம்.. உரையாடல்.. தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்” என பறவையே எங்கு இருக்கிறாய் பாடலில் பருவ வயதில் ஏற்பட்ட முதல் காதலை கண் முன்னே நிறுத்தி நினைவுகளில் தொலந்துவிட்டுருந்த பறவையை, முதல் அனுபவத்தை மீண்டும் தேட வைத்தவர்.

‘‘பறவையே எங்கு இருக்கிறாய்.. ஒரு சகாப்த கலைஞர் நா.முத்துக்குமார்” : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

‘உன் பேரே தெரியாது... உன்னைக் கூப்பிட முடியாது... நான் உனக்கோர் பெயர் வைப்பேன்... உனக்கே தெரியாது...' என்று எங்கோ ஏதோ ஓர் இடத்தில் ஒரு நொடி தோன்றி மறைந்திருந்த காதலுக்குப் பெயரே இல்லாமல் பெயர் வைத்து கொஞ்சவும் வார்த்தைகளை தந்தவர்.

டெக்னாலஜி யுகம் ஆகிப்போனதால் நவீன வார்த்தைகளைப் பயன்படுத்தி, ‘ஹே பேஸ்புக் லாகின் பண்ணு... என் டைம்லைன் எல்லாம் பாரு...' என ஆன்லைன் பாடல் எழுதினார். ‘ஹார்ட்டிலே பேட்டரி சார்ஜ் தான் ஆல் இஸ் வெல்...' என துன்பம் வருகையில் கேட்டுப்பார் என நம்பிக்கை கவி பாடினார். ‘

காண்பதெல்லாம் அழகெனக் கூறி அதற்கும் தேசிய விருதை தட்டிச் சென்றவர். இப்படி அவர் பாடல்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்.. இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே” என காதல் பாடல்களில் தத்துவத்தை வைத்துத் தைப்பவர்.

இவர் வாழ்கைக்கு கூறும் அறிவுரைகளில் ஒன்று

காதலித்து கெட்டு போ.. அதிகம் பேசு.. ஆதி ஆப்பிள் தேடு.. மூளை கழற்றி வை..முட்டாளாய் பிறப்பெடு.. கடிகாரம் உடைகாத்திருந்து காண்.. நாய்க்குட்டி கொஞ்சு.. நண்பனாலும் நகர்ந்து செல்.. கடிதமெழுத கற்றுக்கொள்.. வித,விதமாய் பொய் சொல்.. விழி ஆற்றில் விழு.. பூப்பறித்து கொடு.. மேகமென கலை.. மோகம் வளர்த்து மித.. மதி கெட்டு மாய்.. கவிதைகள் கிறுக்கு.. கால்கொலுசில் இசை உண…தாடி வளர்த்து தவி… எடை குறைந்து மெல்ல செத்து மீண்டு வா…திகட்ட, திகட்ட காதலி..

ஆனந்த விகடனில் ‘வேடிக்கை பார்ப்பவன்' தொடரில் ஒரு ரயில் வண்டியில் ஏறி முந்தைய காலத்துக்குப் போய் சிறுவயது நிகழ்வுகளைப் பார்த்துவிட்டு வருவார். கடந்த காலத்தின் இன்பமும் துன்பமும் ஒரு சேர அழுத்த நிகழ்காலத்துக்கு திரும்பி வருவதாக காட்சி அமைத்திருப்பார்.

அதில் நிகழ்காலப் பெட்டிக்கு வந்ததும், எதிர்காலப் பெட்டிக்கு போக, ‘வண்டியை எதிர் பக்கம் திருப்பச் சொல்றேன்' எனச் சொல்லும் கடவுளிடம், `வேண்டாம். நாளைக்கு என்ன நடக்கப்போகுதுனு தெரிஞ்சுக்கிட்டா, வாழ்க்கையில சுவாரஸ்யம் இருக்காது. வண்டியை நிறுத்தச் சொல்லுங்க. நான் இறங்கிக்கிறேன்!' என்பார். அதோடு இரண்டு தேசிய விருதுகளையும், இரு டாக்டர் பட்டங்களையும் பெற்றுக் கொண்டு 41 வயதிலேயே வாழ்க்கை பெட்டியில் இருந்தும் இறங்கிவிட்டார். எதிர்காலப் பெட்டியை இன்னும் கொஞ்சம் பார்த்திருக்கலாம்.

அப்படிப்பட்ட அசாத்தியக் கவிஞனின் பிறந்த நாள்… சூலை 12…இன்று..!

banner

Related Stories

Related Stories