மலையாள நடிகையும், உதவி இயக்குநருமான அம்பிகா ராவ் 'கும்பலங்கிநைட்ஸ்' திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவு திரையுலகினர், ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மலையாள திரையுலகில் பல்வேறு படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். மலையாள திரை உலகில் பிளாக் பஸ்டர் படங்களான மீஷா மாதவன், சால்ட் அண்ட் பெப்பர், சமீபத்தில் வெளியான அனுராகா காரிக்கின் வெள்ளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மலையாள திரை உலகில் மிகவும் பிரபலமாக வலம் வந்த அம்பிகா ராவ், மலையாளம் தெரியாத நடிகர்களுக்கு படப்பிடிப்பின்போது மலையாள உரையாடல்களை கற்றுக்கொடுத்து வந்தார். 58 வயதாகும் இவருக்கு ராகுல், சோகன் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவரது திடீர் மறைவு மலையாள திரை உலகினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் ரசிகர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.