சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் விக்ரம் திரைப்படம். இப்படத்துடன் ஒப்பிட்டு அதிகம் பேசப்பட்ட திரைப்படம் தி கேங்ஸ்டெர், தி காப், தி டெவில். அப்படி என்ன இந்த படத்தின் ஸ்பெஷல் ? ஏன் இப்படம் தமிழ் ரசிகர்களிடம் இவ்வளவு வரவேற்பைப் பெற்றுள்ளது ? ..காண்போம்.
தி கேங்ஸ்டெர் தி காப் தி டெவில் 2019 ல் வெளியான தென்கொரியத் திரைப்படம். இப்படம் 2005ல் நடந்த உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. வோன் டே லீ இயக்குனராகவும் மா டோங் சேக், கிம் மு எல், கிம் செங் யோ போன்றோர் முன்னணி கதாபாத்திரங்களாகவும் நடித்துள்ளனர்.
மா டங் ஷேக் கேங்ஸ்டெர் கதாபாத்திரத்திலும் கிம் மு எல் காப் கதாபாத்திரத்திலும் கிம் செங் யோ டெவில் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள் . கேங்ஸ்டர், காப் சரி.. அது என்ன டெவில் ?அதுதான் ட்விஸ்ட். டெவில் என்று இங்கே ஒரு சீரியல் கில்லரைக் குறிப்பிடுகிறார்கள்.
பொதுவாக சீரியல் கில்லிங் என்றால் ஒரு வரைமுறை இருக்கும். இளம் வயதினரைக் குறி வைத்துக் கொலைகள் நடந்திருக்கும். ஒரே நிறத்தில் இருப்பவர்களைக் குறி வைத்துக் கொலைகள் நடந்திருக்கும். வயதானவர்களைக் குறி வைத்துக் கொலைகள் நடந்திருக்கும். ஏன் ஒரே மாதிரியான பிளட் குரூப் இருக்கும் ஆட்களைக் குறி வைத்துக் கூடக் கொலைகள் நடந்திருக்கும்.
ஆனால் இத்திரைப்படத்தில் அப்படி எவ்விதக் குறிப்பிட்ட இலக்கும் பயன்படுத்தப்படவில்லை .எப்போதெல்லாம் டெவில் கதாப்பாத்திரத்திற்கு கொலை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் முன்னால் சென்று கொண்டு இருக்கக் கூடிய காரின் மேல் தன் காரை மோதி உள்ளே இருக்கும் நபரை வெளியே வர வைத்துத் தன் கத்தியை எடுத்து தாறுமாறாகக் குத்தி கொலை செய்கிறான் .
சீரியல் கில்லருக்கும் காப்பிற்கும் சம்பந்தம் இருக்கலாம்.. கேங்ஸ்டருக்கும் காப்பிற்க்கும் சம்பந்தம் இருக்கலாம்.. ஆனால் இவர்கள் மூவரும் எப்படி ஒருவரோடு ஒருவர் சம்பந்தப்படுகிறார்கள் அதனால் வரக்கூடிய விளைவுகள் என்ன எனும் கோணத்தில் கதை அமைந்திருக்கிறது.
படத்தின் தொடக்கத்தில் இரவு நேரத்தில் தனியே சென்று கொண்டிருக்கக் கூடிய காரைப் பின் தொடர்ந்து ஒரு கார் செல்கிறது. வேகமாகச் சென்று முன்னே சென்ற கார் மீது மோதிவிட்டு உள்ளே இருந்த நபர் இறங்கி வந்தவுடன் மோதியவன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு செல்கிறான்.
அடுத்த நாள் காலையில் டிராபிக்-ல் ஒரு காருக்குள் அமர்ந்திருக்கிறார் காப். அங்கு ஓரமாக கசினோ விளையாட்டுக் கிளப் இருப்பதைக் கண்டு காரில் இருந்து இறங்கி அதன் உள்ளே செல்கிறார். வெளியில் நின்றிருக்ககூடிய மேனேஜர் காப்பை வழி மறித்து ,”இந்தா இத வச்சுட்டு கிளம்பு”, எனக் கூறி சிறிது ரூபாய் நோட்டுக்களை அவரது சட்டைப் பையில் வைக்கிறான்.
இதனால் ஆத்திரம் அடைந்த காப் அந்த மேனேஜரை அடித்து உதைத்து விட்டு உள்ளே டிக்கெட் விற்றுக் கொண்டிருப்பவனைக் கைது செய்து அழைத்துச் செல்கிறார். கைது செய்யப்பட்டவனது வண்டியையே எடுத்துக் கொண்டு ஒரு கிரைம் ஸ்பாட்டுக்குச் செல்கிறார். அங்கு சென்றதும் நடந்திருப்பது சாதாரண கொலை அல்ல, இதே முறையில் ஏற்கனவே பல கொலைகள் நடந்து கொண்டு வருகிறது என்பதைக் கண்டுபிடிக்கிறார்.
மறுபக்கம் காப் ஹீரோ கஸீனொவில் செய்த செயல் கேங்ஸ்டரிடம் தெரிவிக்கப்படுகிறது. கடுப்பான கேங்ஸ்டர் காப் ஹீரோவுடைய மேலதிகாரியை அழைத்து ,”அவன் திரும்பவும் என் வழியில குறுக்க வரான்,”னும் “ உனக்கு கொடுக்கிற லஞ்சத்துல கொஞ்சமாச்சும் அவங்கலுக்கு குடு அப்பதான் என் வழில வராம இருப்பாங்க”, என்று திட்டுகிறார்.
கேங்ஸ்டரும் காப்பும் எப்பொழுதும் எலியும் பூனையுமாகவே இருக்கிறார்கள். நகரத்தில் தொடர்ந்து ஒரே மாதிரியான கொலைகள் நடந்துட்டே வருதுங்கிறது எனும் செய்தியைத் தன்னுடைய மேல் அதிகாரியிடம் கூறுகிறார். ஆனால் கேங்ஸ்டர் கலாய்த்ததில் காப் மேல் கோபத்தில் இருந்த மேல் அதிகாரி,” உம்பாட்டுக்கு எதையாச்சும் ஒளறிட்டு திரியாம போய் வேலைய பாரு “,எனக் கூறி விடுகிறார்.
இந்த நிலையில் கேங்ஸ்டர் சீரியல் கில்லரால் தாக்கப்படுகிறார். தன்னைத் தாக்கும் அளவிற்கு யாருக்கு தைரியம் உள்ளது எனத் தன் அடியாட்களிடம் தேடச் சொல்கிறார். அவர் ஒருபக்கம் நம்ம போலீஸ் ஹீரோ ஒரு பக்கம் என இருவரும் தனித்தனியே கில்லரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இருவராலும் கண்டுபிடிக்க இயலாமல் போகவே இருவரும் சேர்ந்து தேடுவது என முடிவு செய்து தங்களுக்குள் ஒரு ஒப்பந்தமும் போட்டுக் கொள்கிறார்கள்.
இருவருக்கும் கில்லரைப் பற்றிக் கிடைக்கும் தகவல்களை இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். யாரிடம் கில்லர் முதலில் சிக்கினாலும் அவனை அவர்கள் மேற்க்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பதே அவ்வொப்பந்தம்.
என்னதான் இரு தரப்பினரும் சேர்ந்து வேலை செய்தாலும் அவர்களுக்குள் நடக்கும் ஆடு புலி ஆட்டம் கதைக்கு இன்னும் சிறப்பு. சேர்ந்து வேலை செய்வதாக ஒப்பந்தம் போட்டுக் கொண்ட காப்பும் கேங்ஸ்டரும் எப்படி ஒருவரை ஒருவர் தங்கள் தேவைக்கு மற்றவரை பயன்படுத்திக் கொள்ளும் காட்சிகளும் ஒருவரை ஒருவர் மாறி மாறிக் காலை வாரிக்கொள்ளும் காட்சிகளும் ரகளையானவை.
மொத்ததில் இப்படம் ஒரு சூப்பர் டூப்பர் கிரைம் திரில்லர். கதை முழுக்க அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பு இருக்கும். சீரியல் கில்லர் வரக்கூடிய கட்சிகள் அனைத்தும் அதற்கேற்ற பயம் கலந்த பரபரப்பை ஏற்படுத்தும். அதிலும் மற்ற இருவரின் நடிப்பையும் ஓரங்கட்டும் அளவிற்கான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் மா டங் சேக்.
படம் முழுக்க அடிக்கக் கூடிய ரத்த வாடையும், அதை நியாயப் படுத்த உபயோகிக்க கூடிய வசனங்கள் அனைத்தும் தனித்துவமானவை.
சண்டைக் காட்சி மற்றும் மா டங் சேக் ஜெயிலுக்குள் வரும் காட்சிக்கும் தனி ரசிகர் வட்டாரமே உள்ளது என்றே கூறலாம்.
இத்திரைப்படத்திற்கும் விக்ரம் படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இத்திரைப்படத்தில் கேங்ஸ்டரும் போலீஸும் ஒன்று சேர்ந்து வேலை செய்கிற காட்சிகள் இடம்பெற்றிருக்கும் . விக்ரம் படத்திலும் ரௌடியும் அவரைக் கண்டுபிடிக்க வந்த ஏஜெண்ட்டும் ஒன்று சேர்ந்து வேலை செய்கிற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இரண்டுமே சண்டை காட்சிகள் நிறைந்த ஒரு மாஸ் திரைப்படம் என்பதைத் தாண்டி வேறு எவ்விதத் தொடர்போ ஒற்றுமையோ இல்லை.
- சண்முகப்பிரியா செல்வராஜ்