சினிமா

நாம் சந்திக்கும் மனிதர்களும்.. நம் வாழ்வில் ஏற்படும் தாக்கமும்: Dhobi Ghat படம் சொல்லும் செய்தி என்ன?

கவிதையாய் ஒரு படம் பார்க்க விரும்புபவர்களுக்கு டோபி காட் சரியான படம்.

நாம்  சந்திக்கும் மனிதர்களும்.. நம் வாழ்வில் ஏற்படும் தாக்கமும்: Dhobi Ghat படம் சொல்லும் செய்தி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

அருண் ஒரு ஓவியன். பெரும்பாலான கலைஞர்களுக்கு இருப்பதாகக் கருதப்படும் கிறுக்குத்தனங்கள் கொண்டவன் அவன். தனிமையில் இருக்க விரும்புபவன். உறவுகளிடமிருந்து தள்ளி இருப்பவன். மும்பையில் ஒரு ஃப்ளாட்டில் தங்கியிருக்கிறான். அவனது ஓவியங்களின் கண்காட்சி நடக்கிறது. அந்தக் கண்காட்சியில் அவன் ஷாய் என்கிற ஒரு பெண்ணை சந்திக்கிறேன். அமெரிக்காவைச் சேர்ந்தவள். மும்பைக்கு பொழுதுபோக்கவும் புகைப்படங்கள் எடுக்கவும் வந்திருப்பவள். அவளை தன் இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்கிறான் அருண். அவளுடன் கலவி கொள்கிறான். அடுத்த நாளே அவள் மீது ஆர்வமில்லை என அவன் சொல்ல, அவள் கோபத்துடன் சென்று விடுகிறாள்.

அருணின் துணிகளை துவைத்து கொண்டு வந்து கொடுக்கும் லாண்டரி வேலை செய்பவன் முன்னா. பாலிவுட்டில் நடிகராகும் ஆர்வத்தில் இருப்பவன். அருண் வீடு மாறுகிறான். புது வீட்டில் அவனுக்கு மூன்று வீடியோ கேசட்கள் கிடைக்கிறது. அந்தக் கேசட்டை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுப் பார்க்கிறான். முதல் கேசட்டில் யாஸ்மின் என ஒரு பெண் அறிமுகமாகிறாள். அந்த வீட்டில் முன்பு வசித்த பெண். புதிதாக வந்திருக்கும் வீட்டை அந்தக் கேசட்டில் அவள் சுற்றிக் காட்டுகிறாள். புதிதாக மணமாகியிருக்கும் கணவனைப் பற்றியும் அவன் மீதான காதலைப் பற்றியும் பேசுகிறாள்.

ஷாயின் வீட்டுக்கு லாண்டரி கொடுக்கச் சென்று ஷாய்க்கும் முன்னாவுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. இருவரும் நண்பர்களாகின்றனர். மும்பையின் பல்வேறு இடங்களை ஷாய்க்கு சுற்றிக் காட்ட முன்னா சம்மதிக்கிறான். பதிலுக்கு அவன் பாலிவுட்டில் அறிமுகமாக ஏதுவான புகைப்படங்களை எடுத்துக் கொடுக்க ஷாய் சம்மதிக்கிறாள்.

முன்னாவுக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. தட்டிக் கழிக்கப்படுகிறான். வருமானத்துக்காக துணி துவைக்கும் வேலை செய்கிறான். இரவு நேரத்தில் எலிகளை தேடிக் கொல்லும் வேலை பார்க்கிறான். அவனுடைய சகோதரன் குற்ற வாழ்க்கையில் இருக்கிறான். அந்த வாழ்க்கையில் முன்னாவுக்கு உடன்பாடில்லை. அதே நேரம் சகோதரனின் தொடர்புகளைக் கொண்டும் பாலிவுட்டில் வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கிறான் முன்னா. ஷாயின் மீது முன்னாவுக்கு காதல் இருக்கிறது. ஆனால் காதலை வெளிப்படுத்தத் தயங்குகிறான்.

வழியில் ஒருநாள் அருண் ஷாயை சந்தித்து தன் இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்கிறான். இருவரையும் முன்னா பார்த்து மனத்தாங்கல் கொள்கிறான். ஓரிரவு முன்னா எலி பிடிக்கும் வேலையை புகைப்படம் எடுக்கிறாள் ஷாய். அது தெரிந்தவுடன் முன்னா அவளின் கண்ணில் பட்டுவிடக் கூடாது என ஓடுகிறான்.

நாம்  சந்திக்கும் மனிதர்களும்.. நம் வாழ்வில் ஏற்படும் தாக்கமும்: Dhobi Ghat படம் சொல்லும் செய்தி என்ன?

ஒரு பற்றற்ற ஓவியன், கலாசார மாறுபாடு கொண்ட நிலத்துக்கு வரும் ஒர் பெண், ஒரு பெருங்கனவுக்கு நம்பிக்கையுடன் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சாமானியன், ஏதோவொரு காலத்தில் தன் வாழ்க்கையைக் காணொளியாக பதிவு செய்து சென்றிருக்கும் ஒரு பெண்!

நாம் வாழ்வில் பார்ப்பதுபோல் இயல்பான விதவிதமான மனிதர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரின் வாழ்வில் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள் என்பதையும் எப்படி அவரவர் வாழ்க்கைகளிலிருந்து விடை பெற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் கவிதையாக படம் பேசியிருக்கிறது.

படத்தை இயக்கியிருப்பவர் நடிகர் அமீர் கானின் முன்னாள் மனைவியான கிரண் ராவ். படத்தை அவரும் அமீர்கானும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். அமீர் கான் அருண் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படம் நெட்ஃப்ளிக்ஸில் இருக்கிறது.

banner

Related Stories

Related Stories