கோவிட் காலத்தில் மக்கள் வீட்டில் முடங்கிய பிறகுதான் ஓடிடி தளப் பயன்பாடு அதிகரித்தது. செல்பேசிகளிலேயே படங்களும் தொடர்களும் பார்க்கும் வழக்கம் அறிமுகமானது. படங்களேனும் ஓரிரு மணி நேரங்களில் முடிந்துவிடும். தொடர்கள் அப்படியில்லை. ஒரு சீசனில் ஐந்துக்கும் மேற்பட்ட அத்தியாயங்கள் இருக்கும். ஒவ்வொன்றும் 40 நிமிடங்களுக்குக் குறையாமல் இருக்கும். ஒரு சீசனுடன் முடியாமல் பல சீசன்களுக்கு தொடரும்.
தமிழ்ச்சூழலின் ஆரம்பக் கட்ட ஓடிடி தொடர்களாக House of cards, Money Heist, Game of thrones போன்றவை ஹிட் அடித்தன. அந்த வரிசையில் முதல் கட்ட ஹிட் ஓடிடி தொடர்களில் இடம்பெற்ற தொடர்தான் Breaking Bad. மொத்தமாக ஐந்து சீசன்கள் இருக்கின்றன. 62 எபிசோடுகள். கிட்டத்தட்ட 28 மணி நேரங்கள். முதற்பார்வைக்கு அலுப்பாக தெரிந்தாலும் ஓரிரண்டு எபிசோடுகள் பார்க்கத் தொடங்கியதும் ப்ரேக்கிங் பேட் நம்மை உட்கார வைத்துவிடக் கூடிய தொடர் என அடித்துச் சொல்லலாம்.
வால்டர் ஒயிட் என்கிற ஒரு சாதாரண வேதியியல் பேராசிரியர் ஒரு பெரும் போதை மருந்து வணிகத்தின் பங்காளராக மாறுவதே இத்தொடரின் அடிப்படைக் கதை. வழக்கமான ஐரோப்பிய சினிமாக் கதையைப் போல் தெரிந்தாலும் ப்ரேக்கிங் பேட் தொடரை வித்தியாசப்படுத்தும் சில அம்சங்கள் படத்தில் இருக்கின்றன.
வால்டர் ஒயிட் ஒரு சராசரி பேராசிரியர். அவனுக்கு ஒரு குடும்பம். கர்ப்பம் தரித்திருக்கும் ஒரு மனைவி, மாற்றுத்திறனாளி மகன் ஆகியோர்தான் குடும்பம் எனினும் மனைவியின் தங்கையும் அந்தத் தங்கையின் கணவனும் அவர்களுக்கு நெருக்கம். தங்கையின் கணவர் போதைத் தடுப்புக் காவல்துறைப் பிரிவில் பணிபுரிபவன். எல்லாம் இயல்பாக இருக்கும் வாழ்க்கை, சட்டென திசைமாறும் ஒரு நிகழ்வு ஏற்படுகிறது.
வால்டர் ஒயிட்டுக்கு நுரையீரல் புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. அவனது குடும்பம் நொறுங்கி விடுகிறது. அடிப்படைக் காரணம் நுரையீரல் புற்றுநோயை சரி பண்ணும் அளவுக்கு அக்குடும்பத்துக்கு பொருளாதாரம் கிடையாது, புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் மருத்துவக் காப்பீடும் கிடையாது என்பதுதான்.
மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். மகன் மாற்றுத் திறனாளி. பணத்துக்கு என்ன செய்வது?
வால்டர் ஒயிட் நடத்தும் ஒரு போதை மருந்து ரெய்டில் ஜெசி பிங்க்மேன் வால்டர் ஒயிட்டுக்கு அறிமுகமாகிறான். அவன் வால்டர் ஒயிட்டின் முன்னாள் மாணவன். போதை மருந்து உருவாக்குபவன். வால்டர் ஒயிட்டுக்கு ஓர் யோசனை தோன்றுகிறது. ஜெசி பிங்க்மேனுடன் சேர்ந்து கொண்டு தன் வேதியியல் அறிவைப் பயன்படுத்தி போதைமருந்து உருவாக்கினால் நிறைய பணம் கிடைக்கும் என்றும் அதைக் கொண்டு தன் மருத்துவத்தையும் தனக்குப் பிறகு குடும்பம் நீடிப்பதற்கும் பார்த்துக் கொள்ளலாம் என யோசிக்கிறான். போதை மருந்து உருவாக்க ஜெசி பிங்க்மேனுடன் வால்டர் ஒயிட் அணி சேர, உருவாக்கப்படும் போதை மருந்து உச்ச தரத்தில் இருக்கிறது. போதை மருந்துச் சந்தையில் அவர்களின் தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
இங்கிருந்து தொடங்கும் கதை செல்லும் தூரங்களும் அடையும் உயரங்களும்தான் உலகம் முழுவதும் இத்தொடருக்கு பெருவாரியான ரசிகர்களை உருவாக்கியிருக்கிறது.
வால்டர் ஒயிட் அதிகம் பேசாத, தயக்கம் நிறைந்த, புத்தகப் புழு போன்ற மனநிலையைக் கொண்டவன். ஜெசி பிங்க்மேன் போதை மருந்து பழக்கத்தில் இருப்பவன். வருமானத்தை அதிகரிக்கவென வால்டர் ஒயிட் சொல்லும் எதையும் செய்பவன். ஆனாலும் கடுமையாக வால்டர் ஒயிட்டுடன் முரண்பட்டு வாக்குவாதம் செய்பவன். போதைப்பழக்கத்தில் இருப்பவுக்கே உரிய ஒரு நிச்சயமற்ற தன்மையுடன் இருப்பவன். போதை தடுப்புக் காவலராக பணிபுரியும் வால்டர் ஒயிட்டின் மனைவியின் தங்கைக் கணவனான ஹேங்க், விளையாட்டாகவும் கிண்டலாகவும் பேசக் கூடியவன். ஆனால் வேலையில் சீரியஸாக இயங்குபவன். இவர்களுக்கு இடையே அவர்தம் குடும்பங்களும் இருக்கின்றன.
போதை மருந்து விற்கும் ரவுடி, அடுத்தக் கட்டமாக நிழலுலக தாதா, அதற்கும் அடுத்தக் கட்டமாக ஒரு டான் என வால்டர் ஒயிட்டும் ஜெசி பிங்க்மேனும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு, பல கட்டங்களில் மரணத்தின் வாசல் வரை திரும்பும் சூழல்கள் நேர்ந்து சிலிர்க்க வைக்கின்றன.
சிகிச்சைக்கான பணமெனத் தொடங்கி, குடும்பத்தின் எதிர்காலத்துக்கான சேகரிப்பு என மாறி, குடும்பம் அகன்றதும் திறமை மீதான அகங்காரமாக பரிணாமமெடுத்து ஒரு கட்டத்துக்கு மேல் பணத்துக்காக எதையும் செய்யும் கட்டத்தை எட்டுகிறான் வால்டர் ஒயிட்.
பேராசை பெருநஷ்டம் என்கிற வரிதான் கதை என்றாலும் சொல்லப்பட்டிருக்கும் முறை மற்றும் கதாபாத்திரங்கள் ஆகியவற்றில் தனித்து நிற்கிறது Breaking Bad தொடர். நெட்ஃபிளிக்ஸில் காணலாம்.