சினிமா

நீங்கள் பாசிஸ்ட்டா என்பதை ’ஜன கண மன’ படம் சொல்லும்.. படத்தின் கதை இதுதான்!

நாம் எப்படி பாசிசவாதிகளாக ஆக்கப்படுகிறோம் என்பதை சிறந்த கதைசொல்லலின் வழி சொல்லியிருக்கிறது ’ஜன கண மன’ படம்!

நீங்கள் பாசிஸ்ட்டா என்பதை ’ஜன கண மன’  படம் சொல்லும்.. படத்தின் கதை இதுதான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

கடந்த பத்து வருடங்களில் நம் வாழ்க்கைகளில் அதிகமாகி இருக்கும் தொழில்நுட்பம் மற்றும் சமூகதளத் தாக்கம் என்னவென்பதைப் பற்றியும் அவை உருவாக்கியிருக்கும் புதிய வாழ்க்கைமுறை கொண்டிருக்கும் சிக்கல்களைப் பற்றியும் அதிகமான படங்கள் வெளியானது கேரளத்தில் மட்டுமே என நிச்சயமாக சொல்ல முடியும்.

ஒரு குழந்தையின் கையில் அநாயசமாக புழங்கப்படும் செல்பேசியும் தனிப் சமூகதள அணியைப் பணிக்கு அமர்த்தும் அரசியல் கட்சிகள் வரை, மாறியிருக்கும் சமூக யதார்த்தத்தை உணராத அளவில்தான் இந்தியப் பெரும்பான்மை இருக்கிறது.

ட்ரெண்டிங் பதிவுகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் பிரதான செய்தி ஊடகச் செய்திகளும் இணைய வழிச் செய்திகளும் உருவாக்கியிருக்கும் பிரத்யேக அரசியல் இயங்குதளம் பற்றிய புரிதலும் நம்மிடையே இல்லை. அந்த இயங்குதளத்தில் சாமானியனுக்கு இடம் கிடையாது. களப் போராட்டங்களுக்கு இடம் கிடையாது. களப் பணிக்கும் இடம் கிடையாது.

நம் வாழ்க்கைகளை பாதிக்கக் கூடிய அரசியல் நடவடிக்கையைக் கூட சில நூறு பேர்கள் பதிவிட்டு உருவாக்கும் ட்ரெண்டிங் செய்திகள் இருட்டடிப்பு செய்து விட முடியும்.

சமூகதள மேய்தல் நம் சிந்தனை முறையையே மாற்றி சகிப்புத்தன்மையை இல்லாமலாக்கி, எல்லாவற்றையும் எல்லாரையும் நிராகரிக்கும் (cancelling) போக்கு நம் இயல்பாக மாறியிருக்கும் சூழலையும் நாம் கவனிக்க மறந்து விட்டோம்.

ஒரு சமூகத்தின் மொத்த சிந்தனை ஓட்டத்தையும் பாதித்து அரசியலையே தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும் சமூக தள கலாச்சாரம், ஏற்கனவே அச்சமூதத்தில் இருக்கும் பார்ப்பனியம், சாதியம், மதவெறி, அரச ஒடுக்குமுறை, அசமத்துவம், சுரண்டல் போன்ற சமூகத் தீமைகளை என்ன செய்யும் அல்லது எந்தளவில் வளர்த்து விடும்?

‘ஜன கண மன’ படம் அதைத்தான் பேசுகிறது.

நீங்கள் பாசிஸ்ட்டா என்பதை ’ஜன கண மன’  படம் சொல்லும்.. படத்தின் கதை இதுதான்!

ஒரு கல்லூரிப் பேராசிரியை கொலையாகும் கதையாக தொடங்கும் ‘ஜன கண மன’ படம் அடுத்தடுத்து நம் முன் வைக்கும் விஷயங்கள் முகத்திலறைகின்றன. எவ்வளவு சுலபமாக நாம் அனுதினமும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை பட்டவர்த்தனமாக்கி நம்மைக் குற்றவுணர்வுக்கு உள்ளாக்குகிறது.

படத்தின் சிறப்பம்சம் அதன் உள்ளடக்கத்தில் மட்டுமே இல்லை, அது சொல்லப்பட்ட விதத்தில்தான் இருக்கிறது.

படத்தின் பல இடங்களில் நாம் அன்றாடம் கண்டு, கேட்டு, சமூகதளத்தில் வாதிட்டப் பலச் செய்திகள் வருவதைக் காண முடியும். பல நிஜ சம்பவங்கள் படத்தின் முக்கியமான சம்பவங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. எனினும் அவை நமக்கு பழைய செய்திகளை திரையில் பார்க்கும் அலுப்பைத் தரவில்லை. காரணம், அச்சம்பவங்களை சொல்வதற்கென பின்னப்பட்டிருக்கும் கதை!

பிருத்விராஜ் குருதி என ஒரு மலையாளப் படத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட கத்தி மேல் நடக்கும் கதை அது. மதத் தீவிரவாதங்களை சமமாக வைத்து பேசப்படும் கதை அது. எனினும் பெரும்பான்மை, சிறுபான்மை என மேடு பள்ளங்களில் இருக்கும் இரு பிரிவை சமமாக நிறுத்தி விவாதிப்பதில் அரசியல் புரிதலின்மை இருந்தது. அப்படத்தின் பிரதான கதாபாத்திரமாக பிருத்விராஜ் இருந்தார். அக்கதையின் முக்கியமான செய்தியாகக் கருதப்படும் அரசியல் செய்தியையே வெளிப்படுத்தும் கதாபாத்திரமாகவும் பிருத்விராஜ் இருந்தார்.

எனவே இப்படத்தில் சில காட்சிகளுக்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரமாக பிருத்விராஜ் தோன்றும்போது லேசான பதற்றம் நமக்குத் தொற்றுவது உண்மை. இரு பிரிவுக்கு இடையிலான மோதல், எல்லா கட்சிகளும் ஒன்றுதான் என்பன போன்ற வழக்கமான பொதுமைப்படுத்தும் தாராளவாத சிந்தனைகளை தெளிக்கத் துவங்கி விடுவாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. அதைப் போல்தான் அவரது கதாபாத்திரம் பேசும் துவக்க வசனங்களும் இருக்கிறது. ஆனால் சற்று நேரத்தில் அவரது பாத்திரம் கொண்டிருக்கும் தெளிவான அரசியலுக்குள் நாம் ஈர்க்கப்பட்டு விடுகிறோம். ‘குருதி’ படத்தில் பிருத்விராஜ் செய்த தப்பை இப்படத்தில் செய்யாமல் நம்மைக் காப்பாற்றி விடுகிறார். அவரும் தப்பித்து விடுகிறார்.

நீங்கள் பாசிஸ்ட்டா என்பதை ’ஜன கண மன’  படம் சொல்லும்.. படத்தின் கதை இதுதான்!

உலகம் முழுவதும் வலதுசாரி அரசியல் வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், இந்தியாவில் வலதுசாரி அரசியல் பெரும்பான்மையாக வீற்று மக்களுக்கு எதிரான அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், ‘பெரும்பான்மையே சொன்னாலும் தவறு தவறுதான்’ என்கிற காந்தி மேற்கோளுடன் பிருத்விராஜ் கதைக்குள் நுழைகிறார்.

வசனங்களில் தீப்பொறி பறக்கிறது. பார்ப்பனியம், அரசியல்வாதிகள், நீதி முறை, பெரும்பான்மை வாதம், பைனரி சிந்தனை, சமூகதளங்கள், காவல்துறை என கடந்த பத்து வருடங்களில் நம்மை கோபமூட்டிய எல்லா விஷயங்களையும் ஒரே படத்தில் வைத்து வெளுத்து வாங்கியிருக்கிறார் இயக்குநர். ஒரு கணம் கூட அலுப்பு தட்டவில்லை.

பாசிசத்தின் சிறப்பே என்னவெனில் அது மக்களையும் பங்குதாரர்களாக்குகிறது. மக்களின் ஆதரவின்றி பாசிசம் வளருவதில்லை. நமக்குள்ளேயே பாசிசக் கூறு நாமறியாதபடிக்கு இயல்பாக வீற்றிருக்கிறது. நாம் எப்படி பாசிசவாதிகளாக ஆக்கப்படுகிறோம் என்பதை சிறந்த கதைசொல்லலின் வழி சொல்லியிருக்கிறது ’ஜன கண மன’ படம்!

’ஜன கண மன’ படம் ஓ.டி.டி. தளமான Netflix-ல் வெளியாகியுள்ளது. நீங்கள் பாசிஸ்ட்டா என்பதை படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

banner

Related Stories

Related Stories