01. வரவேற்பு பெறும் பெண் ஒளிப்பதிவாளர்!
`ராக்கி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் அருண் மாதேஷ்வரன். வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீணா ரவி நடித்திருந்த இந்தப் படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அருண் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது `சாணிக் காயிதம்'. இதில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.
இப்படம், கடந்த மே 6ஆம் தேதி பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தில் யாமினி என்னும் பெண் ஒளிப்பதிவாளர் பணியாற்றியுள்ளார். படத்தில் ஒளிப்பதிவானது பெரிதளவில் பாராட்டு பெற்றுவருகிறது. இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் யாமினி. நிறைய கற்றுக் கொண்டதாகவும், அனுபவம் பெற்றதாகவும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
02. ஜி.வி.பிரகாஷின் `ஐங்கரன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், மஹிமா நம்பியார் நடித்திருக்கும் படம் `ஐங்கரன்'. நாயகனாக நடித்ததுடன் படத்திற்கு இசையும் அமைத்திருக்கிறார் ஜி.வி பிரகாஷ். சரவணன் அபிமன்யு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். வெளியிடத் தயாராக இருந்தாலும், சில காரணங்களால் இந்தப் படம் ரிலீஸ் ஆகாமலே இருந்தது. சமீபத்தில் இந்தப் படம் மே 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகாமல் போனது. இந்நிலையில், படத்தை மே 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நடிகர் தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டு ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தியுள்ளார்.
03. விமானம் ஓட்டும் நடிகர் வினய்
2007ம் ஆண்டு உன்னாலே உன்னாலே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வினய் . அதையடுத்து ஜெயம்கொண்டான், மிரட்டல், துப்பறிவாளன், டாக்டர், எதற்கும் துணிந்தவன் என பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் வினய் சிறிய ரக விமானத்தை ஓட்டும் வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நடிகை விமலா ராமன், உங்கள் கனவு நனவாகி விட்டது என்று கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
04. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் வசூல் நிலவரம் !
மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பான டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் திரைப்படமானது இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் பட வரிசையில் இரண்டாவது பாகமிது. இந்தப் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு இந்தியாவில் வசூல் சாதனையை மேற்கொண்டுவருகிறது. ரிலீஸான அன்று மட்டும் 27 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் மொத்தமாக 100 கோடி ரூபாய் வசூலை பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாக ஹாலிவுட் படங்களும் இந்தியாவில் நல்ல வசூலைக் குவிக்கின்றன. அந்த வரிசையில் இணைகிறது டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். திரைப்படம்.
05. கே.ஜி.எஃப். பட நடிகர் மறைவு
கன்னட சினிமாவின் பிரபல நடிகர் மோகன் ஜுனேஜா. நூற்றுக்கணக்கான படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார். ஏராளமான மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த கேஜிஎப், கேஜிஎப் 2 படங்களில் ராக்கியாக நடித்த யஷ்ஷின் பெருமைகளை பத்திரிக்கையாளரிடம் பேசும் நபராக நடித்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த இவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவரது உயிர் பிரிந்தது. தொடர்ந்து மாலையில் இறுதிச்சடங்கு நடந்தது. மோகன் ஜுனேஜாவின் மறைவுக்கு கன்னட திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.