திரைப்படங்களில் லாஜிக் மீறல்கள் என்றாலே சொல்லி வைத்தது போல அனைவரது நினைவுக்கும் முதலில் எட்டுவது என்னவோ தெலுங்கு, கன்னட படங்களாகவே இதுவரை இருந்தது. ஆனால் அந்த பொது புத்தியை தற்போது அடித்து நொறுக்கி இவ்விரு மொழி திரைத்துறையும் உலகளவில் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இருக்காது.
அதன்படி அண்மைக்காலமாக தெலுங்கு மற்றும் கன்னட சினிமா படங்கள் மற்ற மொழி ரசிகர்களை ரசிக்கவும் வியக்கவும் வைத்திருக்கிறது. அதில் யாஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப்-1 படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. திரையரங்குகளில் பார்த்தவர்களை விட ஓடிடி தளங்களிலும், தொலைக்காட்சியிலும் பார்த்தவர்களே அதிகம். அதிலும் ‘அடச்ச.. இந்த படத்தை தியேட்டர்ல பார்க்காம போய்ட்டோமே’ என நினைத்து சமூக வலைதளங்களில் ஃபயர் விட்டவர்களே ஏராளம்.
சினிமாவில் லாஜிக் மீறல்களை கே.ஜி.எஃப் ரிலீசுக்கு முன் பின் என வகையறுக்கலாம். அந்த வகையில் கே.ஜி.எஃப் படத்தின் கதையை ரசிகர்களின் மனதில் ஆழமாகவும் அழகாகவும் பதிய வைத்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நீல். அதன்படி, ராக்கி பாய் என்ற கதாப்பாத்திரத்தை சிறுவனாகவும், இளைஞனாகவும், டான் ஆகவும், மக்களை காப்பாற்றும் ஒரு நாயகனாகவும் வடிவமைத்திருப்பார். மசாலா, கமர்சியல் சினிமானா அது கே.ஜி.எஃப்-1 தான் என்ற எண்ணமும் ரசிகர்கள் மத்தியில் பதிய வைத்திருக்கிறார் இயக்குநரும், அவரது கதைக்கு ஏற்றார் போல கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்த அத்தனை அத்தனை நடிகர்களும்.
ஏனெனில், ராக்கியோ கருடனோ அனைவரது கதைகளின் பின்னணிகளுமே நமக்கு காட்டப்பட்டது என்னவோ கண்ணோட்டங்களாகதான். அனந்த் நாக் என்ற எழுத்தாளரிடம் இருந்து தொகுப்பாளர் மூலம் கே.ஜி.எஃப்-ன் கதை நேயர்களுக்கு காட்டப்படுகிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாயகத்தனம், வில்லத்தனம் என அனைவரது பராக்கிரமங்களும், மிரட்சியடைய வைக்கும் சாகசங்களுமே கதைகளாக இருந்தாலும், அவ்வப்போது இறந்த காலத்துக்கு அழைத்து கொண்டுபோய் விட்டுவிட்டு மீண்டும் நிகழ்காலத்துக்கு அழைத்து வருவது போன்ற காட்சிகளை அமைத்திருக்கும் இடத்திலேயே ‘இதுலாம் லாஜிக் எப்படி நடக்கும்’ என்ற பொது புத்தி உடைத்தெறியப்பட்டிருக்கும்.
குறிப்பாக அனந்த் நாகிடம் 'கதைல நீங்க ரொம்ப முன்னாடி போய்ட்டீங்க, அதுக்கு அப்பறம் என்ன பன்னான் உங்க ஹீரோ' போன்ற வசனங்களை வைத்து பார்வையாளர்களிடம் நாம் இவ்வளவு நேரம் கதையைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறோமா என்ற உணர்வையயே வராமல் படமாக்கியிருப்பார்கள். இதனிடையே நேர்காணலின் போது அலுவலக ஊழியர் ஒருவர் ‘சூப்பரு சூப்பரு..’ என கதையோடு ஒன்றி போவதாக வரும் காட்சியே கே.ஜி.எஃப் படம் ஒரு மாஸ்டர் பீஸ்தான் என சாட்சியாக அமைந்திருக்கும்.
கன்னட மொழியை கடந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்தியாவின் ஐந்து மொழிகளிலும் கேஜிஎஃப் படம் வெளியாகி பட்டையக் கிளப்பியதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் இடம்பெற்ற வசனங்களான “நான் எதோ பத்து பேர அடிச்சு டான் ஆகல, நான் அடிச்ச பத்து பேருமே டான் தான். 8 ஷூக்கு பாலிஷ் போட்டாதான் ஒரு பன் கிடைக்கும், விதியோட விளையாட்டுல அன்னிக்கு ராத்திரி 2 சம்பவம் நடந்தது. அப்போ தங்க சுரங்கமும் திறந்துச்சு, அவனும் பிறந்தான்” இப்படி அதிர வைக்கும் வசனங்களோட காட்சியமைப்பும் இயைந்து வந்த ஒவ்வொரு வசனங்களும் தெறி.
இப்படியாக முழுக்க முழுக்க இரண்டரை மணிநேரத்திற்கு பார்வையாளர்களின் கவனத்தை மும்பை, நராச்சி, அரண்மனை உள்ளிட்டவற்றை சுற்றியே இருக்கச் செய்து அடுத்தது என்ன நடக்கும் என்ற சுவாரஸ்யத்தையும் ஆர்வத்தையும் கூட்டச் செய்திருந்ததுதான் கேஜிஎஃப் படத்தின் அடுத்த பாகத்தையாவது திரையரங்கு சூழலில் பார்த்திட வேண்டும் என அனைவரையும் இட்டுச் செல்ல வைத்திருக்கிறது.
இப்போது 4 ஆண்டுகள் கழித்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை வைத்து எக்கச்சக்க எதிர்ப்பார்ப்புடன் திரையரங்குக்கு வந்த ரசிகர்களை படக்குழு ஏமாற்றாததால் திரையரங்குகளில் அடுத்த ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகளே கிடைக்காத வகையில் ரசிகர்களின் படையெடுப்பு அதிகரித்திருக்கிறது.