1. பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ இரண்டு பாகங்களாக வெளியாகிறதா?
பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படங்களின் நாயகனாக உயர்ந்துவிட்ட பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து ஆதிபுருஷ், ப்ராஜக்ட் கே, ஸ்பிரிட் ஆகிய பெரிய பட்ஜெட் படங்கள் உருவாகி வருகிறது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலர் இணைந்து நடித்துவரும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் ப்ரோடக்ஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
2. ரவிதேஜாவின் ‘டைகர்’ படத்தில் இணைந்த நாயகிகள்!
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு ‘டைகர் நாகேஷ்வர ராவ்’ என தலைப்பு அறிவித்துள்ளனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் விரைவில் துவங்கவிருக்கும் நிலையில் படத்தின் நாயகிகளாக நுபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
3. நிவின் பாலி படத்திற்கு புதுமுகங்களை தேடும் படக்குழு!
பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியின் தயாரிப்பில் உருவாகவிருக்கும் படம் ‘டியர் ஸ்டூடண்ட்’. சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் ஃபிலிப் ராய் இணைந்து இயக்கும் இந்த படத்திற்கு 16 முதல் 22 வயதுடைய ஆண், பெண் நடிகர்கள் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
4. சிவகார்த்திகேயன் மீது பதில்மனு தாக்கல் செய்த ஞானவேல் ராஜா!
நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது வழக்கு பதிவு செய்திருந்தார். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் கட்டாயத்தின் பேரிலேயே ‘மிஸ்டர் லோக்கல்' படம் எடுக்கப்பட்டு, அதனால் தனக்கு 20 கோடி நஷ்டம் எனவும், உண்மைகளை மறைத்து இது போன்ற வழக்கை சிவகார்த்திகேயன் தொடர்ந்துள்ளதால் அவருக்கு அபராதத்துடன் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் ஞானவேல் ராஜ பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
5. தனுஷின் அடுத்த படத்தில் மீண்டும் கென் கருணாஸ்!
தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் அவரது மகனாக நடித்து கவனம் ஈர்த்தார் கென் கருணாஸ். இந்த நிலையில் தனுஷ் நடித்து வரும் ‘வாத்தி’ என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க கென் கருணாஸ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.