அமெரிக்காவில் உருவாகும் படங்களுக்கு மட்டுமல்ல சீரிஸ்களுக்கும் உலகமெங்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இன்றைய இந்த டிஜிட்டல் உலகில் பல மொழி திரைப்படங்களை பார்க்கவும், சீரிஸ்களை பார்க்கவும் அதிக வசதி உண்டு.
இதன் காரணமாக பல வேற்றுமொழி படங்களும் சீரிஸ்களும் எல்லா மொழி ரசிகர்களையும் சென்றடைவதோடு மட்டுமல்லாமல் அத்தகைய கலைஞர்களையும் பெருமைப்படுத்தச் செய்கிறது. ஆனால், இதற்கெல்லாம் முன்னதாக ஒரு ஹாலிவுட் சீரிஸ் உலகளவில் கவனம் ஈர்த்தது என்றால் அது ‘Game Of Throne’ சீரிஸ் என்பது மிகையாகாது.
பிரபல நாவலாசிரியரான ஜார்ஜ் மார்ட்டின் எழுதிய ‘A Song of Ice and Fire’ஐ மையமாக வைத்து உருவானதுதான் இந்த ‘Game Of Throne’. இது 7 சாம்ராஜ்யங்களை உள்ளடக்கிய ட்ராகன் வம்சத்தின் அழிவு மற்றும் அதற்கு பின்னான புரட்சியை அடிப்படையாக கொண்டிருந்தது.
அதை வைத்து 8 சீசன் வெளியிட்டு வெற்றிக்கண்டது ‘HBO’. தற்போது இந்த புரட்சிக்கு முந்தைய கதையை 'House of the Dragon' எனும் தலைப்பில் சீரிஸாக உருவாக்கி வருகின்றனர். இதன் முதல் சீசன் வரும் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் GOT ரசிகர்கள் 'House of the Dragon' சீரிஸின் வெளியீட்டுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். மேலும் அது தொடர்பாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு தத்தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.