பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவர் தற்போது தமிழில் பெரும் வெற்றி பெற்ற ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.
ஹிருத்திக் ரோஷன் அரிய வகையான B-நெகட்டிவ் ரத்த வகை கொண்டவர். இந்த வகை ரத்தம் சொற்ப எண்ணிக்கை கொண்டவர்களுக்கே இருக்கும் என்பதால் இந்த வகை ரத்தம் கொண்டவர்கள் விபத்து போன்றவற்றில் சிக்கும்போது அவசர காலங்களில் உடனடியாக ரத்தக் கொடை பெறுவது குதிரைக்கொம்பாக இருந்து வருகிறது.
இந்நிலையில், World Random Act of Kindness தினத்தை முன்னிட்டு ஹிருத்திக் ரோஷன் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்குச் சென்று ரத்த தானம் செய்துள்ளார்.
ரத்த தானம் செய்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஹிருத்திக் ரோஷன், "எனது B-நெகட்டிவ் இரத்த வகை அரிதான வகை என்று என்னிடம் கூறப்பட்டது. மருத்துவமனைகளில் பெரும்பாலும் அவை பற்றாக்குறையாகவே இருக்கின்றன. இரத்த வங்கிகளுக்கு பங்களிப்பதில் நானும் ஒரு முக்கிய அங்கமாக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஹிருத்திக் ரோஷனின் இந்த விழிப்புணர்வூட்டும் செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.