இளையராஜாவும், கங்கை அமரனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பத்தாண்டுகளுக்கும் மேலாக பேசுவதை நிறுத்தியிருந்த நிலையில், இருவரும் சந்தித்து மனம் விட்டுப் பேசியுள்ளனர்.
கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணன் இளையராஜாவும், தம்பி கங்கை அமரனும் பிரிந்தனர். குடும்ப நிகழ்ச்சியில் கூட இருவரும் ஒன்றாக கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் இருவரும் நேரில் சந்தித்து மனம்விட்டுப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பு இருவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது இருவரின் ரசிகர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்தச் சந்திப்பு குறித்து கங்கை அமரன் கூறுகையில், “நீண்ட காலத்துக்குப் பிறகு அண்ணனை சந்தித்தேன். அவரே என்னை அழைத்துப் பேசினார். என்னைப் பற்றியும் என்னுடைய உடல்நிலையைப் பற்றியும், விசாரித்தார்.
சிறுவயதில் நான் எப்படி இருந்தேன். என்னவெல்லாம் செய்தேன் என்பதைப் பற்றி ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினார். என் மனைவி இறப்பு பற்றியும் கேட்டார். அவரது இசை இப்போது எப்படியிருக்கிறது என்று சொன்னேன்.
எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அண்ணனுடன் சேர்ந்திருக்கிறேன். அவர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வேன். இனி என் வாழ்க்கையில் எல்லாமே என் அண்ணன் எடுக்கும் முடிவுதான். அந்த முடிவுகளுக்கு கட்டுப்படுவேன்” எனக் கூறியுள்ளார்.