சென்னை பாண்டிபஜார் தியாகராய சாலையில் உள்ள ரெயின்போ ஆர்கேட் என்ற வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள் மற்றும் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதன் முதல் தளத்தில் உள்ள துணிக்கடையில் நேற்று (பிப்.,06) பகல் 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தகவல் அறிந்து தியாகராய நகர் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அந்த வளாகத்தின் 2வது தளத்தில் இருக்கும் வழிபாட்டு அரங்கில் சூழ்ந்த கடும் புகையால் உள்ளே சிக்கிக் கொண்டிருந்தவர்களையும் மீட்டுள்ளனர்.
இதனிடையே பிரபல சின்னத்திரை நடிகரான ஸ்ரீ இந்த தீ விபத்தை நேரில் பார்த்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் , “2வது தளத்தில் உள்ள வழிபாட்டுக் கூடத்தில் நான் உட்பட பெரியவர்கள் குழந்தைகள் என பலரும் இருந்தோம். 12 மணியளவில் அந்த அறையில் புகை நுழைந்தது. அடுத்த 3 நிமிடங்களில் அறை முழுக்க புகை நிறைந்தது.
வெளியில் வந்து பார்த்தபோது கீழே வர முடியாத அளவுக்கு புகை இருந்தது. எனவே மொட்டை மாடிக்கு அனைவரும் சென்று விட்டோம். பின்னர் சிறிது நேரத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தியதால் புகை குறைந்தது. பின்னர் எங்களை பாதுகாப்பாக கீழே அழைத்து வந்தனர்" எனக் கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தீயணைப்புத் துறை இணை இயக்குநர் பிரியா, "இந்த வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எங்களது கட்டுப்பாட்டு அறைக்கு 12 மணியளவில் தகவல் வந்தது. உடனடியாக தியாகராய நகர், தேனாம்பேட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து எங்களது 5 வாகனங்களை கொண்டு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம்.
இங்குள்ள முதல் தளத்தில் உள்ள துணிக்கடையில் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சேத விபரங்கள் இனிமேல்தான் தெரியவரும். மின்கசிவால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. 2வது தளத்தில் இருந்தவர்களை எங்கள் வீரர்கள் பத்திரமாக மீட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை" எனக் கூறியுள்ளார்.