கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருந்து மீண்டுக் கொண்டிருந்த இந்தியா தற்போது மூன்றாவது அலையான ஒமைக்ரானின் பரவலில் சிக்கிக்கொண்டிருக்கிறது.
இருப்பினும் கடந்த மாதத்தை விட தற்போது தொற்று பரவல் குறைந்திருப்பதால் ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதில் திரையரங்குகளும் அடக்கம்.
அந்த வகையில் தமிழ் தெலுங்கு இந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் அடுத்தடுத்து படங்கள் திரையரங்க ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு விருந்து வைக்கும் வகையில் படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.
கொரோனா பரவல் முற்றுப்பெறாத காரணத்தால் ஓடிடி தளங்களில் படங்களை பார்ப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவ்வகையில் தமிழ் தெலுங்கு இந்தி மொழிகளில் வெளியாக இருக்கும் படங்கள் தியேட்டர் ரிலீஸுக்கு பிறகு எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி அஜித்தின் வலிமை, விஷாலின் வீரமே வாகை சூடும் ஆகிய படங்களின் டிஜிட்டல் டெலிகாஸ்ட் உரிமம் Zee5 வாங்கியுள்ளது.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய்யின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் டான் படங்களின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியுள்ளது. அதேபோல பீஸ்ட் படத்துடன் ரிலீசாக இருக்கும் யாஷின் கே.ஜி.எஃப் சாப்டர் 2 அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருக்கிறது.
அதேபோல இந்தியில் லால் சிங் சடார், ஜெர்சி நெட்ஃப்ளிக்ஸிலும், பச்சன் பாண்டே, ப்ரித்விராஜ், ஷாம்ஷேரா, ஜெயேஷ்பா ஜோர்தார் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.
ராஜமவுலியின் பிரமாண்ட படைப்பான ஆர்.ஆர்.ஆர். படம் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜீ5 தளங்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.